PID (Pelvic inflammatory Disease) நோய் என்றால் என்ன?
இடுப்பு அழற்சி நோய் என்பது ஒரு பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகளின் தொற்று என்று சொல்லலாம். இது பொதுவாக பாலியல் ரீதியாக பரவும் தொற்றுநோயால் ஏற்படும் நிலை ஆகும். இடுப்பு அடிவயிற்றில் உள்ளது மேலும் இது ஃபலோபியன் குழாய்கள், கருப்பைகள், கருப்பை வாய் போன்றவற்றை உள்ளடக்கிய நிலை.
பல வகையான பாக்டீரியாக்கள் PID (Pelvic inflammatory Disease) உண்டு செய்யலாம். இந்த பாக்டீரியாக்கள் தவிர பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள், கோனொரியா மற்றும் கிளமிடியா போன்றவற்றை உண்டு செய்யலாம். இந்நிலையின் போது பாக்டீரியா முதலில் நுழைந்து தொற்றுநோயை உண்டு செய்கிறது. காலப்போக்கில் இது இடுப்பு உள்ளுறுப்புகளுக்கு பரவி உள்ளே இருக்கும் உறுப்புகளை பாதிக்கிறது.
இந்த நோய்த்தொற்று உடலில் இரத்தத்தில் பரவினால் இந்த இடுப்பு அழற்சி நோய் என்பது ஆபத்தானது. சமயங்களில் உயிரிழப்பு வரை கூட உண்டு செய்யலாம். உங்களுக்கு இந்த தொற்று இருப்பது போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனே உங்கள் மருத்துவரை அணுகுங்கள். இந்த நோயின் அறிகுறிகள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
PID இடுப்பு அழற்சி நோயின் அறிகுறிகள் என்ன?
இந்த நோய் கொண்ட பெண்கள் பெரும்பாலும் உணரக்கூடிய அறிகுறிகள் கொண்டிருப்பதில்லை. அறிகுறிகள் இலேசானதாகவோ அல்லது கவனிக்கத்தக்க முடியாததாகவோ இருக்கலாம். சமயங்களில் திடீரென்று இவை விரைவாக தொடங்கலாம். அதனால் எப்போதும் ஒருவித எச்சரிக்கையுடன் உடல் மாற்றங்களை கவனிப்பது அவசியம்.
- அடி வயிற்றில் வலி
- மேல் வயிற்றில் வலி
- வயிற்றில் மென்மை என்பது பொதுவான அறிகுறி.
- குளிர் அல்லது காய்ச்சல்
- வலிமிகுந்த உடலுறவு காலங்கள்
- சிறுநீர் கழிக்கும் போது வலி
- யோனி பகுதி துர்நாற்றம், மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் அசாதாரண வாசனையுடன் வெளியேற்றம்,
சோர்வு , - குமட்டல் மற்றும் வாந்தி
- ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது மாதம் முழுவதும் இரத்தப்புள்ளிகள் அல்லது தசைப்பிடிப்பு
PID இடுப்பு அழற்சி நோய் ஏன் உண்டாகிறது?
இனப்பெருக்க பாதையில் நுழையும் பாக்டீரியாக்கள் பெரும்பாலும் இடுப்பு அழற்சி நோயை ஏற்படுத்துகின்றன. இந்த பாக்டீரியாக்கள் பிறப்புலிருந்து கருப்பை வாய் வழியாக ஃப்லோபியன் குழாய்கள் மற்றும் கருப்பை இடுப்புக்கு அனுப்பப்படுகின்றன.
பொதுவாக பாக்டீரியா பிறப்புறுப்புக்குள் நுழையும் போது, கருப்பை வாய் மற்ற இனப்பெருக்க உறுப்புகளுக்கு ஆழமாக பரவாமல் தடுக்கிறது. சில நேரங்களில் கருப்பை வாய் கோனோரியா மற்றும் கிளமிடியா போன்ற எஸ்டிஐ களால் பாதிக்கப்படும் போது பாக்டீரியாக்களை வெளியேற்றுவது குறைவாக இருக்கும்.
மேலும் இந்த சிகிச்சை அளிக்கப்படாத கோனோரியா மற்றும் கிளமிடியா போன்றவை 90% இடுப்பு அழற்சி நோய்க்கு (Pelvic inflammatory Disease) காரணமாகின்றன. பல நேரங்களில் இந்த வகை தொற்று ஐயூடி வைக்கப்படும் நேரத்தில் எஸ்டிஐ சோதனை மூலம் தடுக்கப்படலாம்.
பல பாலியல் துணைகள் இருந்தால், ஆணுறை போன்ற கருத்தடை சாதனங்களை பயன்படுத்தாமல் உடலுறவில் ஈடுபட்டால், பாலுறவில் அதிக ஈடுபாட்டுடன் இருந்தால் இந்த ஆபத்து காரணிகள் அதிகம் என்பதால் இத்தகைய நிலையில் இருப்பவர்கள் அறிகுறிகளை உன்னிப்பாக கவனிப்பதன் மூலம் எளிதாக சிகிச்சயளிக்கலாம்.
PID நோயைக் கண்டறியும் முறைகள் என்ன?
இடுப்பு பகுதியில் உள்ள மென்மை மற்றும் வீக்கத்தின் அளவை மதிப்பிடுவதற்கு இடுப்பு பரிசோதனையை மேற்கொள்ள பரிந்துரை செய்வார். கோனோரியா மற்றும் கிளமிடியா போன்ற பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்று உள்ளதா என்பதை கண்டறிய யோனி மற்றும் கருப்பை பகுதியில் இருந்து திரவ மாதிரிகள் எடுக்கப்படும்.
தொற்று கண்டறிய இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்யப்படும்.
இனப்பெருக்க உறுப்புகளின் நிலை அறிய அல்ட்ராசவுண்ட் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்படும்.
திசு தொற்று மற்றும் திசு அழற்சி அறிகுறிகள் கண்டறிய எண்டோமெட்ரியல் பயாப்சி, எண்டோமெட்ரியல் திசுக்களின் சிறிய மாதிரியை அகற்ற மெல்லிய குழாய் கருப்பையில் செருகி பரிசோதிக்கப்படுகிறது.
மேலும் அறிகுறிகளை கண்டறிந்தால் எவ்வளவு விரைவில் மருத்துவரை பார்க்கிறீர்களோ அவ்வளவு விரைவில் சிகிச்சை எளிதாக இருக்கும்.
மேலும் மருத்துவர் உடல்நலம், அறிகுறிகள், பாலியல் செயல்பாடு மற்றும் அறிகுறிகளை பற்றி கேட்பார். அதனால் அனைத்தையும் விரிவாக தயக்கமின்றி மருத்துவரிடம் பேச வேண்டும். இதன் மூலம் அவர் உங்களுக்கு சிகிச்சை அளிப்பது எளிதாக இருக்கும். நோய் தீவிரமாகாமலும் மீண்டும் மீண்டும் தொற்று நேராமலும் தடுக்க முடியும்.
PID இன் சிக்கல்கள் என்ன?
இந்த நோயை உடனடியாக கண்டறிந்து சிகிச்சை பெற்றால் PID குணப்படுத்த முடியும். ஆனால் இனப்பெருக்க உறுப்புகளுக்கு ஏற்கனவே ஏற்பட்ட சேதத்தை சிகிச்சையால் மாற்ற முடியாது.
பல முறை இந்த PID (Pelvic inflammatory Disease) சிக்கலை பெற்றிருந்தால் ஃபலோபியன் குழாய்களில் வடுக்களை உருவாக்கலாம். வடுக்களானது பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
நாள்பட்ட இடுப்பு வலி
இடம் மாறிய கர்ப்பத்தை உண்டு செய்யலாம். ஃப்லோபியன் குழாய்களில் பாதிக்கப்பட்ட வடு திசுக்களின் வளர்ச்சி கருவுற்ற முட்டையை கருப்பையில் பொருத்துவதை தடுக்கலாம். இதனால் எக்டோபிக் கர்ப்பம் உண்டாகலாம்.
கருவுறாமை
இந்த PID நாள்பட்ட நிலையில் இனப்பெருக்க உறுப்புகளுக்கு சேதத்தை ஏற்படுத்துகிறது. கர்ப்பம் தரிப்பதற்கான திறனை பாதிக்கிறது. மேலும் இந்த நோய் தாக்கிய பிறகு சிகிச்சை தாமதமானால் மலட்டுத்தன்மை அபாயத்தை அதிகரிக்கிறது.
PID (Pelvic inflammatory Disease) கருவுறுதலை பாதிக்கும் ஏனெனில் 8-ல் ஒரு பெண்ணுக்கு கர்ப்பம் தரிப்பதில் சிரமம் இருப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. மீண்டும் மீண்டும் தொற்று ஏற்பட்டவர்களுக்கு கர்ப்பம் தரிக்க கடினமாக இருந்தது கண்டறியப்பட்டது. அதனால் PID பாதிப்பு இருந்தால் முழுமையாக குணமாகும் வரை சிகிச்சையில் இருப்பது அவசியம்.
உடலுறவில் வலி
PID காரணமாக உண்டாகும் வலி நீண்ட காலத்துக்கு இருக்கும். இது அண்டவிடுப்பின் போது மற்றும் உடலுறவின் போது அதிக வலியை உண்டு செய்யலாம். உங்களுக்கு PID இருந்தால் நீங்கள் தனியாக இல்லாமல் உங்கள் துணையுடன் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் மருத்துவர அறிவுறுத்தலின் படி குறிப்பிட்ட நாட்கள் வரை உறவு கொள்ளாமல் இருப்பதன் மூலம் தொற்று வராமல் தடுக்க முடியும்.
சீழ் உண்டு செய்யலாம்
ஒரு புண் என்பது இடுப்பு அழற்சி நோயால் இனப்பெருக்க மண்டலத்தில் உருவாக கூடிய சீழ் திரட்சியாகும். இது பொதுவாக கருப்பைகள் மற்றும் கருப்பை குழாய்களை பாதிக்கிறது இது tubo-ovarian abscess என்று அழைக்கப்படுகிறது.
இந்த தொற்று ஒரு முறை வந்தாலும் மீண்டும் மீண்டும் வரக்கூடியது என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதிலும் குமட்டல் மற்றும் வாந்தியுடன் தீவிர வயிற்று வலி மற்றும் காய்ச்சலை உணர்ந்தால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகுவதன் மூலம் அபாயமில்லாமல் சிகிச்சையை பெற உதவும்.
PID சிகிச்சை முறைகள்
ஆரம்ப கட்டத்தில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை மருத்துவர் பரிந்துரைப்பார். குணமடைய தொடங்கினாலும் கூட குறிப்பிட்ட காலம் வரை மருந்துகளை சரியாக எடுக்க வேண்டும். வாய் வழி நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்துகள் மூலம் சிகிச்சை செயல்படுகிறதா என்பதை கவனிப்பார்கள். அறிகுறி குறையாத நிலையில் ஐவி மருந்துகள் தேவைப்படும்.
தொற்று உறுதியானால் தனியாக சிகிச்சை எடுக்க கூடாது. துணையுடன் இணைந்து சிக்சிசை பெற வேண்டும். அப்படி செய்தால் மீண்டும் தொற்று வராமல் பாதுகாக்கலாம்.
இந்த PID நோய்க்கு அறுவை சிகிச்சை என்பது அரிதானது. ஆரம்ப கட்ட சிகிச்சையாக நுண்ணுயிர் எதிர்ப்பிகள், ஐவி செய்த பிறகும் தொடர்ந்து உங்களுக்கு புண் இருந்தால் அறுவை சிகிச்சை பற்றி மருத்துவரே உங்களிடம் பரிந்துரைப்பார்.
PID சிகிச்சையின் போது கவனிக்க வேண்டியவை
இந்த PID (Pelvic inflammatory Disease) நோய் உறுதியானால் மருத்துவரிடம் நீங்கள் பாதுகாப்பற்ற உடலுறவில் இருந்தால் அது குறித்து பேசுங்கள். அப்போதுதான் விரைவில் சிகிச்சை பெற முடியும். ஏனெனில் உடனடி சிகிச்சை அபாயத்தை குறைக்கிறது.
யோனியிலிருந்து கருப்பை மற்றும் ஃபலோபியன் குழாய்களில் பாக்டீரியாவை மேல் நோக்கி தள்ளுவதை தடுக்க டச்சிங் செய்வதை தவிர்க்கவும். டச்சிங் என்பது தண்ணீர் அல்லது வேறு ஏதேனும் திரவ முறையை பயன்படுத்தி யோனியை உள்ளிருந்து கழுவி சுத்தம் செய்யும் செயல்முறை. இம்முறையில் பாக்டீரியாவின் சமநிலையை பாதிக்க செய்யலாம். மேலும் இது சிக்கல்களை உண்டு செய்யலாம்.
மருந்து செயல்படுகிறதா என்பதை உறுதி செய்ய மருத்துவரை அவ்வபோது சந்தியுங்கள். நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள உடலுறவு கொள்ளும் போது (மருத்துவர் ஒப்புதல் அளித்திருந்தால்) ஆணுறைகள் பயன்படுத்தவும். குறிப்பாக ஒன்றுக்கு மேற்பட்ட பாலியல் துணையை கொண்டிருந்தால் நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
PID இடுப்பு அழற்சி நோயை தடுக்க முடியுமா?
சில நேரங்களில் PID ஆனது பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்று காரணமாக இருக்காது. இது இனப்பெருக்க உறுப்புகளுக்கு செல்லும் சாதாரண யோனி பாக்டிரீயாவிலிருந்து வரலாம். டச்சிங் செய்வதை தவிர்ப்பது இந்த நோய் ஆபத்தை குறைக்கலாம்.
பெரும்பாலான நேரங்களில் பாதுகாப்பற்ற உடலுறவு காரணமாக இந்த PID (Pelvic inflammatory Disease) உண்டாகலாம். அதனால் ஒன்றுக்கு மேற்பட்ட பாலியல் கூட்டாளர்கள் இருப்பதை தவிருங்கள். நோய்த்தொற்றுகளிலிருந்து தவிர்க்க பாதுகாப்பான உடலுறவு அவசியம். ஏனெனில் பல கூட்டாளிகள் இருந்தால் ஆபத்து அதிகரிக்கலாம் என்பதால் பிறப்பு கட்டுப்பாட்டு தடுப்பு முறைகள் தேர்வு செய்யலாம்.
நீங்கள் கருத்தடை மாத்திரை எடுத்துகொள்பவராக இருந்தால் விந்தணுக்கொல்லி தடுப்பு முறையையும் பின்பற்றுங்கள். வித்தியாசமான அறிகுறி இருந்தாலும் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உடலுறவு கொள்வதற்கு முன்பு பரிசோதனை செய்து கொள்வது உதவியாக இருக்கும்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
வழக்கமான சோதனைகள், கர்ப்பப்பை வாய் நோய்த்தொற்றுகள் இனப்பெருக்க உறுப்புகளுக்கு நோய் பரவுவதற்கு முன்பு கண்டறிய உதவும். அதனால் பெண்கள் வருடத்துக்கொருமுறை செய்ய வேண்டிய பரிசோதனை குறித்து மருத்துவரிடம் ஆலோசித்து செய்து கொள்ள வேண்டும். இது தவிர வேறு அறிகுறிகள் என்ன இருந்தாலும் மருத்துவரை அணுகுங்கள்.