பெண் பிள்ளைகளின் சரியான பூப்படைதலுக்கான வயது 12 அல்லது 13 வரை தான். ஆனால் உணவு முறை, ஊட்டச்சத்து, வாழ்க்கை முறை போன்றவை பருவமடைதலுக்கான நேரத்தையும் காலத்தையும் மாற்றி அமைக்க கூடும்.
பூப்படைதலுக்கு பிந்தைய மாதவிடாய் முறைகள் அசாதாரணமாக இருப்பதை கண்டறிந்தால் அவர்கள் வளர்ந்தபிறகு வரக்கூடிய பிரச்சனைகளை முன்கூட்டியே கணித்து சிகிச்சை அளிக்க முடியும். அதற்கு இயல்பான மாதவிடாய் ரத்தபோக்கும், அசாதாரண இரத்தபோக்கு போன்றவற்றை அறிந்துகொள்ளும் தன்மை பெண் குழந்தைகளுக்கு இருக்கவேண்டும்.
பெண்கள் பருவமடைந்த பிறகு சிறிது காலத்திலேயே மார்பகங்களின் வளர்ச்சிக்கு பிறகு மாதவிடாய் தொடங்கும். இது 1 முதல் 2 வருடங்கள் வரை ஆகலாம். முதன் முதலில் பெண் பிள்ளைகள் பூப்படையும் போது தொடங்கும் உதிரபோக்கானது நான்கு வாரங்கள் வரை இருக்கும். மாதவிடாய் சுழற்சியின் முழுமையான சுழற்சி வரை முதல் மாதவிடாய் இருக்கும்.
இது பெண் பிள்ளைகளின் உடல்நிலைக்கேற்ப இது மாறுபடும். சில பெண் பிள்ளைகளுக்கு இதற்கு பிறகு நிறைய மாதங்கள் கழித்து உதிரபோக்கு வரலாம். அல்லது ஒரே மாதத்தில் மீண்டும் மீண்டும் வரலாம்
மாதவிடாய் உதிரபோக்கு பெண் பிள்ளைகளின் பெண் உறுப்பிலிருந்து வெளியேறுகிறது. கர்ப்பப்பை வாய் வழியே வெளியேறி பெண் உறுப்பு வழியாக வெளியேறக்கூடும். கர்ப்பபை பேரிக்காய் வடிவில் இருக்கும் ஒரு உறுப்பு. இது கர்ப்ப காலத்தில் கரு மற்றும் கருவை பராமரிக்கவும் வளர்க்கவும் செய்யும் முக்கிய உறுப்பு.
இதிலிருந்து வெளியேறும் உதிரபோக்கை வெளியேற பெண் பிள்ளைகளின் பெண் உறுப்பு ஒரு பாதையை தந்துள்ளது. இது குறித்த விழிப்புணர்வு பெண் பிள்ளைகளுக்கு இருந்தாலே மாதவிடாய் காலத்தை அதிக அசெளகரியமானதாக கருதமாட்டார்கள்
மாதவிடாய் சுழற்சியின் போது வயிற்றில் தசைப்பிடிப்பு, வீக்கம் போன்றவற்றை உணர்வார்கள். ஹார்மோன் உற்பத்தி அதிகரிப்பால் இந்த பிடிப்புகள் உண்டாகிறது. இந்த ஹார்மோன்கள் கருப்பை தசைகள் சுருங்குவதற்கு காரணமாகிறது. சில பெண்பிள்ளைகளுக்கு முதுகுவலியும், மேல் தொடைகளில் வலியும் இருக்க கூடும்.
மாதவிடாய் காலத்தில் குமட்டல், வயிற்றுப்போக்கு, எரிச்சல், தலைவலி மற்றும் சோர்வு போன்றவையும் உண்டாகிறது. பெண் பிள்ளைகள் தினமும் உடற்பயிற்சி பழகுபவர்களாக இருந்தால் அவர்களது உடலில் இயற்கை வலி நிவாரணிகளான் எண்டோர்பின்கள் உருவாகிறது. இது மாதவிடாய் கால வலியை குறைக்க செய்கிறது.
பூப்படைந்த பிறகு முதல் மாதவிடாய் வருவதற்கு பெண்ணின் உடல் உறுப்புகள் வளர்ச்சியும் போதுமான அளவு இருக்க வேண்டும். ஆனால் பெற்றோர்கள் பெண் பிள்ளைகள் பருவமடைந்த அடுத்த மாதம் முதலே மாதவிடாய் சுழற்சியை எதிர்பார்க்க தொடங்குவார்கள்.
ஆரோக்கியமான பெண் பிள்ளைகள் சரியான வயதில் பூப்படையும் போது அடுத்த மாதம் முதலே மாதவிடாய் சந்திப்பார்கள். சில பெண் பிள்ளைகளுக்கு அப்படி நிகழவில்லை என்றால் அது உடல் கோளாறு என்று நினைத்து பயந்துவிடுவார்கள் ஆனால் இந்த சுழற்சி சீராக வருவதற்கு சில மாதங்கள் அல்லது வருடங்கள் வரை ஆகலாம்.
முதல் மாதவிடாய் சுழற்சிக்குரிய ஹார்மோன்கள் முழுமையாக வளர்ச்சி பெறாத நிலையில் மாதவிடாய் சுழற்சி தள்ளிபோக வாய்ப்புண்டு. பெண் பிள்ளைகளில் சிலருக்கு மாதவிடாய் சுழற்சி சீராக வர மூன்று வருடம் கூட ஆகலாம்.ஹார்மோன் சுழற்சி படிப்படியாக வளர்ச்சியடையும் என்பதால் இது குறித்து கவலை கொள்ள வேண்டியதில்லை.
முதல் மாதவிடாய் சுழற்சி காலம் முதலே அம்மாக்கள் கவனிக்க வேண்டிய விஷயம் மாதவிடாய் சுழற்சி எத்தனை நாட்கள் வரை வருகிறது. உதிரபோக்கு எப்படி உள்ளது. தசைவலி பிடிப்பு அசாதாரணமாக உள்ளதா என்பது தான். மேலும் சரியான இடைவெளியில் ( மாதவிடாய் சுழற்சி என்பது 21 முதல் 35 நாட்களுக்குள் பெண்ணின் உடல் நிலையை பொறுத்து) ஒவ்வொரு மாதமும் வருகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.
ஆரம்ப கட்டத்தில் சிலருக்கு மாதவிடாய் காலம் மிக குறுகியதாக இருக்கும். முதல் மற்றும் இரண்டாம் நாளில் மட்டுமே உதிரபோக்கு இருக்கும். சிலருக்கு முதல் நாள் சிறிதளவு உதிரபோக்கு இருக்கும். இரண்டாம் நாளில் உதிரபோக்கு இல்லாமல் மூன்றாம் நாளில் தொடங்கும்.
இது எட்டு நாட்கள் வரை நீடிக்கும். இன்னும் சிலருக்கு மாதவிடாய் வந்தால் 10 நாட்கள் வரை உதிரபோக்கு இருக்கும். இவையெல்லாம் படிப்படியாக அடுத்தடுத்த சுழற்சியில் சீராக கூடும். இது ஒழுங்கற்ற மாதவிடாய் போலும் என்று நினைக்க வேண்டாம்.
எப்போது அது சிக்கல்
பெண் பிள்ளைகள் முதல் மாதவிடாய் சுழற்சியை எதிர்கொள்வதற்குள் அதிக உடல் பருமனை கொண்டிருந்தால் அவர்களுக்கு சிக்கல் வரலாம். ஒரே மாதத்தில் இரண்டு முறை அல்லது 20 நாட்கள் இடைவெளியில் மாதவிடாய் வந்தால் அது சிக்கலானதாக இருக்கலாம். மாதவிடாய் காலங்களில் முதல் நாளில் இலேசாக உதிரபோக்கு இருந்து பிறகு மீண்டும் மூன்று மாதங்கள் கழித்து மாதவிடாய் இதே போல் வருவதும் சிக்கலாக இருக்கலாம்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
தொடர்ந்து வருடங்கள் கடந்தும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி வந்தாலும் அது சிக்கலானதாக இருக்கலாம். சில பெண் பிள்ளைகளுக்கு மாதவிடாய் நாட்களில் உதிரபோக்கு இல்லாமல் அடி வயிறு வலி அதிகமாக இருக்கும்.
இது வளர்ச்சியடையாத கர்ப்பபபை உதிரபோக்கு வெளிவரும் குழாயில் அடைப்பு போன்றவற்றாலும் உண்டாக கூடும். இன்னும் சில பெண்களுக்கு மாதவிடாய் காலம் முழுவதுமே அதிக ரத்தபோக்கு இருக்கும். இதுவும் ஆரம்பத்திலேயே கவனிக்க வேண்டியதே.
இதையெல்லாம் தாண்டி பெண் பிள்ளைகள் உதிரபோக்கின் போது பயன்படுத்தும் நாப்கின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வும் கொண்டிருக்க வேண்டும். மாதவிடாய் சுழற்சி குறித்த சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது பாதுகாப்பானது.