ஒரு பெண் கர்ப்ப காலத்தில் உடல் உறுப்புகளில் பலவித மாற்றங்களை சந்திப்பார்கள். அப்படியான மாற்றங்களில் ஒன்று மார்பக காம்புகள். கர்ப்ப காலத்திலேயே பிரசவத்துக்கு பிறகு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க மார்பகம் தயாராகிவிடக்கூடும்.
கர்ப்பகாலத்தில் மார்பகத்தில் உண்டாகும் மாற்றங்கள் பொதுவானவை. இந்த மாற்றங்கள் கருவுற்ற ஆரம்பத்திலேயே உருவாக கூடியவை. மார்பகங்கள் மென்மையாக மாறும். மார்பகங்கள் வழக்கத்தை காட்டிலும் பெரியதாக இருக்கும். மார்பகங்கள் கனமாக இருக்க கூடும்.
கர்ப்ப காலத்தில் மார்பு காம்புகளில் ஏற்படும் மாற்றம்.
மார்பக திசுக்கள் அக்குள் மற்றும் கைகளின் கீழ் இருக்கும் திசுக்களின் அளவும் அதிகரிக்க கூடும். சிலருக்கு மார்பகங்களில் கூச்ச உணர்வு இருக்கும். மார்பகங்களில் புண் உண்டாக கூடும்.
குறிப்பாக முலைக்காம்புகளில் சுருக்கென்று குத்துவது போன்ற உணர்வு இருக்கும். புரோஜெஸ்டிரான் அளவு அதிகரித்ததன் காரணமாகவும் தாய்ப்பால் குழாய் தயாராவதாலும் இது உண்டாகிறது.
மார்பகங்கள் கர்ப்பகாலத்தில் கரு வளர வளர ஹார்மோன் மாற்றங்களால் முலைக்காம்புகளை சுற்றி இருண்ட நிறத்தை உண்டாக்கும். மார்பகத்தில் தோல் விரிவடைந்து சிலருக்கு தழும்புகள் கூட உண்டாகலாம்.
கர்ப்பகாலத்தில் மார்பகத்தில் ரத்த ஓட்டம் அதிகரிக்க கூடும். மார்பகத்தில் உள்ள நரம்புகளும் முக்கியத்துவம் பெறுகிறது.
குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுவதாக இந்த இடத்தில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதே இதற்கு காரணம். இந்த பகுதியில் நீல மற்றும் பச்சை நிற ரத்த நாளங்கள் வெளியே தெரியகூடும்.
குழந்தை பிறப்புக்கு முன்பே மார்பக காம்பில் கசிவு வரவும் செய்யும் அதை சீம்பால் என்று சொல்லுவோம். வெகு சில பெண்களுக்கு மார்பக காம்பில் ரத்தக்கசிவு வரவும் செய்யும். இது ரத்த நாளங்களின் அளவு அதிகரிப்பதே காரணம்.
மார்பகத்தில் உண்டாகும் இந்த மாற்றங்களை எதிர்கொள்ள பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும். மார்பகங்கள் பெரிதாக இருப்பது கர்ப்பகாலத்தில் உண்டாக கூடியது.
கர்ப்ப காலத்தில் மார்பு காம்புகளை பராமரிக்கும் முறை!
மார்பகபகுதியில் இருக்கும் தோல் வறட்சியை சந்திக்க அதிக வாய்ப்புண்டு. அதனால் தினமும் குளிக்கும் போது அந்த இடத்தில் அதிகளவு சோப்பு கொண்டு தேய்ப்பது மேலும் வறட்சியை உண்டாக்க செய்யும்.
அதனால் சுத்தமான நீரை கொண்டு மார்பு காம்புகளை தேய்த்து கழுவினால் போதும். இது மார்பு பகுதியில் வறட்சியை தடுக்க கூடும்.
அதிகப்படியான சோப்பு பயன்பாடு மார்பு காம்புகளில் வெடிப்புகளையும் உண்டாக்க கூடும் என்பது குறிப்பிடத்தக்கது. சீம்பால் வரும் போதும் அதன் வாடை போக வேண்டும் என்று தவறியும் சோப்பு பயன்படுத்தகூடாது.
சோப்புக்கு மாற்றாக மாய்சுரைசிங் லோஷன் போன்றவற்றை மருத்துவரின் அறிவுரையோடு எடுத்துகொள்ளலாம். இது மார்பக காம்புகளை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும். இதை பயன்படுத்தும் போது ஆடைகள் மார்பக காம்புகளில் உராய்வதையும் தடுக்க முடியும்.
மார்பக காம்புகளில் வலி இருக்கும் போது இந்த வலியை குறைக்க மார்பக காம்புகளில் மசாஜ் செய்வது பலன் அளிக்கும். என்ன செய்யலாம்.
ஐஸ் பேக் ஒத்தடம்
மார்பகங்களில் முலைகாம்புகளில் வலி இருக்கும் போதும் அதிக கனமாக உணரும் போதும் ஐஸ்கட்டி ஒத்தடம் எடுத்துகொள்ளலாம். மார்பக காம்புகளில் வலி உணர்வு குறையும்.
அதிக குளிர்ச்சியில்லாமல் மிதமாக ஒத்தடம் கொடுப்பதன் மூலம் இதமாக இருப்பதை உணரலாம். வாரம் ஒரு முறை அல்லது வலி இருக்கும் போது இதை செய்யலாம்.
ஆயில் மசாஜ்
சுத்தமான தேங்காயெண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை கொண்டு மார்பகத்தை சுற்றி வட்டவடிவமாக அழுத்தமில்லாமல் மசாஜ் செய்யலாம்.
தினமும் இரவு தூங்கும் போது இந்த மாதிரி பத்து நிமிடங்கள் மசாஜ் செய்யலாம். முலைக்கம்புகளிலும் அழுத்தமில்லாமல் மென்மையான மசாஜ் செய்யலாம். இதனால் மார்பக காம்புகள் வறட்சியில்லாமல் பாதுகாக்கலாம்.
வெதுவெதுப்பான நீர்
கர்ப்பகாலத்தில் குளிர்ந்த நீர் தவிர்க்க வேண்டும் என்பது போன்றே அதிக சூடு நிறைந்த வெந்நீரும் தவிர்க்க வேண்டும்.
அதிக சூடு சருமத்தை மேலும் வெடிக்க செய்யும். தினமும் இரண்டு வேளை குளியல் நல்லது. அல்லது இரண்டு வேளை மார்பகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவினால் போதும். முலைக்காம்பு வலிகள் குறைந்து இதமாக இருக்கும்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
உள்ளாடை கவனம்
கர்ப்பகாலத்தில் மார்பகங்கள் பெரிதாக இருக்கும். அப்போதும் பழைய உள்ளாடைகள் அணிவதால் முலைக்காம்புகள் உராய்ந்து வலி மிக அதிகமாக இருக்கும்.
கருவுற்ற முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் ட்ரைமெஸ்டர் காலங்களில் மார்பகங்களின் அளவை கவனித்து அதற்கேற்ப சரியான அளவில் உள்ளாடைகளையும் வாங்கி அணிய வேண்டும்.
அதே போன்று தினமும் உள்ளாடைகளை மாற்ற வேண்டும்.
மிதமான உடற்பயிற்சி
கர்ப்பகாலத்தில் மார்பகங்கள் பெரிதாவது உண்டு இதை சரியான முறையில் பராமரிக்காமல் இருந்தால் பிரசவக்காலத்துக்கு பிறகு மார்பகங்கள் தொங்கும் நிலையை அடையலாம்.
கர்ப்பகாலத்தில் மென்மையான உடற்பயிற்சிகள் செய்யும் போது மார்பகத்துக்கான பயிற்சிகளையும் செய்யலாம். இது மார்பக வலியையும் குறைக்கும். மார்பகங்கள் தொங்குவதையும் தடுக்கும்.