செயற்கை முறை கருத்தரித்தல் என்றால் என்ன? என்ன மாதிரியான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது?

Deepthi Jammi
11 Min Read

இயற்கையான முறையில் கருத்தரித்து குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத தம்பதியருக்கு, செயற்கை முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு தான் ஐ.வி.எஃப் (IVF – In Vitro Fertilization) எனப்படும் செயற்கை முறை கருத்தரித்தல் சிகிச்சை.

செயற்கை முறை கருத்தரித்தலின் போது ஐவிஃஎப் (IVF) ஆய்வகத்தில் பெண்ணின் கருமுட்டை மற்றும் ஆணின் விந்தணுக்கள் தனித்தனியே எடுக்கப்படும். பிறகு அவற்றை சேர்த்து கருமுட்டையாக வளர செய்து பிறகு பெண்ணின் கர்ப்பப்பைக்குள் செலுத்தப்படும். இந்த செயற்கை முறை கருத்தரித்தலில் வளரப்படும் குழந்தை டெஸ் ட்யூப் பேபி (Test-Tube Baby) என்று அழைக்கப்படுகிறது.

ஐ.வி.எஃப் (IVF – In Vitro Fertilization)

தம்பதியர் குழந்தையின்மை பிரச்சனைக்கு வரும் போதே ஐவிஎஃப் சிகிச்சை என்பது முடிவு செய்வதில்லை. தம்பதியர் இருவருக்கும் உரிய பரிசோதனை செய்யும் போது சிலருக்கு இயற்கையாக குழந்தை பெறுவதில் தடை இருக்கலாம். அதிலும் மருத்துவ சிக்கல்கள் இருந்து சிகிச்சை முறையில் சரி செய்ய இயலாதவர்களுக்கு மட்டுமே பல சிகிச்சைக்கு பிறகு ஐவிஎஃப் முறை பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த சிகிச்சையில் ஊசி மூலம் பெண்ணின் உடலில் இருக்கும் கருமுட்டையை வெளியே எடுப்பார்கள். இதே போன்று ஆண்களின் விந்தணுக்களையும் வெளியே எடுப்பார்கள். பிறகு இரண்டையும் இணைத்து பிறகு கருவாக மாறியதும், பெண்ணின் கருப்பைக்குள் மாற்றுவது தான் ஐவிஎஃப் (IVF) சிகிச்சை முறை. இயல்பாகவே பெண்களின் உடலில் நடைபெறக்கூடிய இதை செயற்கையாக வெளியில் நடைபெற செய்து பிறகு உள்வைப்பு செய்யப்படுவதால் இது ஐவிஎஃப் என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஐவிஎஃப் சிகிச்சை முறையானது 40 வருடங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டது. முதல் டெஸ்ட் ட்யூப் பேபியாக பிறந்த பெண் குழந்தைக்கு திருமணம் முடிந்து அவர் இயற்கையாகவே குழந்தையும் பெற்றிருக்கிறார் என்பதில் இருந்தே இதன் வெற்றியை அறிந்து கொள்ளலாம்.

குழந்தையின்மைக்கான இந்த சிகிச்சை முறையில் ஐ.வி.எஃப் (IVF – In Vitro Fertilization) போன்று மற்றொரு சிகிச்சையாக IUI சிகிச்சை சொல்லலாம். இவை இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு.

இயல்பான கருத்தரிப்பு என்பது என்ன என்பதை தெரிந்துகொண்டால் சிகிச்சை முறை குறித்தும் புரிந்துகொள்ளலாம். பொதுவாக மாதவிடாய் சுழற்சி (30 நாட்களுக்கு ஒரு முறை) வரும் போது அவர்களுக்கு 14 நாளில் கருமுட்டை வெடித்து வளரும். அப்போது உடலுறவு கொள்ளும் போது விந்தணுக்கள் வேகமாக நீந்தி அந்த கருமுட்டையுடன் இணைந்து கருவாக மாறி இயல்பாக கருக்குழாயிலிருந்து கருப்பைக்குள் உள் வைக்கப்பட்டு கரு வளரும். இது இயல்பான கருத்தரித்தல் ஆகும்.

IUI சிகிச்சை என்றால் என்ன?

IUI (Intrauterine Insemination) சிகிச்சை என்பது, பெண்களுக்கு மாத்திரைகள் மூலம் கருமுட்டையை வெடிக்க வைத்து, ஆண்களின் விந்தணுக்களில் தரமானதை மட்டும் எடுத்து அதை ப்ராசஸ் செய்து நேரடியாக கருப்பைக்குள் வைக்கப்படும். இதற்கு மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இருக்காது. நீண்ட நாள் சிகிச்சை கிடையாது. 10 நிமிடங்கள் மட்டுமே இதற்கான சிகிச்சை நேரமாக இருக்கும்.

IUI சிகிச்சை என்றால் என்ன

இந்த சிகிச்சை செய்து கொண்ட பெண்கள் நார்மலாக செய்ய வேண்டிய வேலைகளை செய்யலாம். மிகக் கடுமையான உடற்பயிற்சிகள் செய்பவர்கள் மட்டும் சில காலங்கள் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கலாம். அதிக பேர் இந்த Intrauterine insemination (IUI) சிகிச்சை செய்துகொண்டால் ஓய்வில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் வழக்கமான உடல் செயல்பாடு செய்யலாம். இதனால் எந்த பாதிப்பும் உண்டாகாது.

IUI சிகிச்சை எப்போது பலன் கொடுக்கும்?

IUI சிகிச்சை என்பது ஒரு முறை மட்டுமே செய்வதில்லை. சுழற்சி முறையில் 6 முறை இதை செய்வதுண்டு. இதற்குள் வெற்றி கிடைத்துவிடும். சிலர் 10 முதல் 12 முறை வரை இந்த Intrauterine insemination (IUI) சிகிச்சை செய்து கொள்ள விரும்புவார்கள். ஆனால் இதற்கான வெற்றி வாய்ப்பு என்பது 6 முறைக்குள் கிடைக்க வேண்டும். இதற்கு பிறகும் கருத்தரிப்பு இல்லையெனில் மீண்டும் பரிசோதனை செய்யப்படும். பிறகு தான் ஐவிஎஃப் சிகிச்சைக்கு அவர்கள் தயார்படுத்தப்படுவார்கள்.

ஐ.வி.எஃப் (IVF – In Vitro Fertilisation) எப்போது?

குழந்தையின்மைக்கு சிறந்த வரப்பிரசாதமாக ஐ.வி.எஃப் (IVF – In Vitro Fertilization) சிகிச்சை சொல்லப்படுகிறது. தம்பதியர் குழந்தையின்மை பிரச்சனையை எதிர்கொள்ளும் போது அவர்களுக்கு இறுதியாக ஐ.வி.எஃப் (IVF) சிகிச்சை தான் என்றால் அவர்களை தயார்படுத்த வேண்டும்.

குழந்தையின்மையில் பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாம். பெண்களை பொறுத்தவரை 2 வருடங்கள் ஆகிவிட்டது. IUI சிகிச்சை செய்தும் கருத்தரிக்கவில்லை. அதே நேரம் உடலில் எவ்வித கோளாறும் இல்லை என்னும் போது ஐவிஎஃப் முயற்சி செய்ய பரிந்துரைப்பதுண்டு.

சிலருக்கு மாதவிடாய் சுழற்சியின் போது உடலில் அண்டவிடுப்பு நடைபெறாது. அவர்களுக்கு Intrauterine insemination (IUI) சிகிச்சை செய்தும் பலனில்லை எனில் அவர்களுக்கும் ஐவிஎஃப் பரிந்துரைப்பதுண்டு.

சிலருக்கு உடலில் எல்லாமே நார்மலாக இருக்கும். ஆனால் கருத்தரிப்பு இயல்பாக இருக்காது. இது unexplained infertility என்று அழைக்கப்படுகிறது. இவர்களுக்கும் ஐ.வி.எஃப் சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.

சிலருக்கு எண்டோமெட்ரியோசிஸ் பிரச்சனை இருக்கலாம். கருப்பை சதை வேறு எங்கேனும் இருந்தால் இது கருத்தரிப்பதில் பிரச்சனை உண்டு செய்யலாம். சாக்லேட் சிஸ்ட், ஒழுங்கற்ற மாதவிடாய், அண்டவிடுப்பு பிரச்சனை, ஹார்மோன் கோளாறுகள் ஃபைப்ராய்டு போன்றவர்களுக்கும் ஐவிஎஃப் பரிந்துரைக்கப்படுகிறது.

கருக்குழாய் அடைப்பு என்பது சிலருக்கு இருக்கும். இரண்டு கருக்குழாய் அடைப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு ஐவிஎஃப் மட்டும் தான் தீர்வாக இருக்கும்.

ஆண்களுக்கான குறைபாடு

ஆண்களை பொறுத்தவரை விந்தணுக்கள் குறைவாக இருந்தால் இயல்பான கருத்தரிப்பில் பிரச்சனை இருக்கலாம். சிலருக்கு விந்தணுக்கள் இருக்கும் . ஆனால் வெளியில் வராது. இது மருத்துவ மொழியில் (Obstructive azoospermia) என்று அழைக்கப்படுகிறது. இவர்களுக்கு விதைப்பையில் இருந்து குத்தி விந்தணுக்கள் எடுத்து கருமுட்டையில் செலுத்தி கருப்பைக்குள் வைக்கப்படும். இந்த இடத்தில் ஐவிஎஃப் சிகிச்சை தேவைப்படுகிறது.

சில தம்பதியருக்கு அதிக முறை கருச்சிதைவு உண்டாகலாம். சிலருக்கு குழந்தை ஏதேனும் குறைபாடுடன் பிறக்கலாம். இதனால் அடுத்த குழந்தைக்கு பயப்படுவார்கள். அந்த மாதிரி சூழலில் கருமுட்டையை பரிசோதனை செய்து முந்தைய குழந்தை மாதிரியான பாதிப்பு ஏற்படும் என்றால் அதை வைக்காமல் சரியான கருமுட்டையை பொருத்துவதும் உண்டு.

ஐவிஎஃப் சிகிச்சை முறை கவலைப்படகூடியதா?

தம்பதியர் பெரும்பாலும் இந்த ஐவிஎஃப் சிகிச்சைக்கு பயத்தோடு இருப்பார்கள். இதுதான் இறுதி சிகிச்சை அதோடு அதிக செலவும் கூட என்பதால் இவர்கள் மன ரீதியாகவும் பயத்தோடு இருப்பார்கள். இதை போக்க ஒவ்வொரு தம்பதியருக்கும் ஆலோசனை அளிக்கப்படும். ஐவிஎஃப் சிகிச்சை இருந்தால் என்ன மாதிரியான சிகிச்சைகள் செய்யப்படும் என்பது குறித்து முழுமையான புரிதலை உண்டாக்க ஐவிஎஃப் சிகிச்சையில் தனிக்குழுவும் உண்டு.

உதாரணத்துக்கு தம்பதியர் இருவருமே உடல் பருமனை கொண்டிருந்தால் அதை குறைப்பதற்கு அறிவுறுத்தப்படும். ஏனெனில் உடல் எடை சீராக இருந்தால் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

ஆண்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டிருந்தால் அதை தவிர்க்க அறிவுறுத்தப்படுவதுண்டு. ஏனெனில் புகைப்பழக்கம் தவிர்த்தால் விந்தணுக்கள் வீரியத்துடன் தரமாக இருக்கும்.

இந்த மாதிரியான ஆலோசனைகள் தம்பதியருக்கு அளிக்கப்பட்டு அவர்களை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சிகிச்சைக்கு தயார்படுத்த வேண்டும்.

ஐவிஎஃப் சிகிச்சைக்கு ஏன் அதிக செலவு?

ஹார்மோன் ஊசி

ஐவிஎஃப் சிகிச்சை என்றாலே அதிக செலவு என்று சிலர் பயப்படுவதுண்டு. இதற்கான சிகிச்சையின் தொடக்கம் ஆன IUI சிகிச்சை முதலே ஊசி தான். இவை 6 முறை தான் பயன்படுத்தப்படுகிறது.

ஐவிஎஃப் சிகிச்சையின் போது தொடக்கம் முதல் ஊசி மூலம் மட்டுமே சிகிச்சையளிக்கப்படுகிறது. மாதவிடாய் சுழற்சியின் 2 ஆம் நாள் தொடங்கி சிலருக்கு 12 நாட்கள் வரை தினமும் ஊசி மூலம் மருந்து கொடுக்க வேண்டியதிருக்கும். உடல் பருமனை பொறுத்து ஹார்மோன் அளவு வேறுபடும். மருந்து அளவும் ஒவ்வொருவர் உடல் ஆரோக்கியம் ஏற்ப மாறுபடலாம். இந்த மருந்துகள் அதிக விலை கொண்டவை என்பதால் தினசரி ஊசி போடும் போது செலவும் கூடுதலாக அதிகரிக்கிறது.

ஸ்கேன் பரிசோதனை

ஐவிஎஃப் சிகிச்சையின் போது ஊசிக்கு பிறகு அடிக்கடி ஸ்கேன் செய்யப்படும். கருமுட்டை வளர்ச்சி, அதன் வடிவம், அளவு அனைத்தையும் அவ்வபோது பரிசோதிக்க இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை ஸ்கேன் செய்ய வேண்டியிருக்கும். குழந்தையின் வளர்ச்சி நார்மலாக ஆகும் வரை இதை செய்ய வேண்டியிருக்கும். இந்த ஸ்கேன் பரிசோதனைக்கும் செலவு ஆகும்.

மயக்கமருந்து

ஐவிஎஃப் சிகிச்சையின் போது இரண்டு விதமான செயல்பாடுகள் அவசியம். ஒன்று கருமுட்டையை முழுவதும் வெளியே எடுக்க வேண்டும். அதற்கு மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை தியேட்டரில் (அதிக பாதுகாப்பான ஐவிஎஃப் பிரத்யேகமான) வைத்து எடுக்க வேண்டும். கருமுட்டை எடுத்து அதற்கென பிரதயேகமாக இருக்கும் அடுத்த அறையில் உடனே பரிசோதனையில் கொடுக்க வேண்டும்.

கருமுட்டை கிருமிகள் இல்லாமல் பாதுகாப்பதும் உடனடியாக பரிசோதனை கூடத்தில் செயல்பாட்டுக்கு அளிப்பதும் இதை கவனமாக செயல்படுத்துவதும் இந்த சிகிச்சையில் முக்கியமானது. இந்த நேரத்தில் எம்பிரியாலஜிஸ்ட் தவிர மருத்துவர் கூட உடனே உள்ளே செல்ல முடியாது. வேறு யாரும் அனுமதிக்கவும் மாட்டார்கள். இந்த எம்பிரியாலஜிஸ்ட், ஆப்ரேஷன் தியேட்டர் செலவு (சுத்தமாக பராமரிக்கப்படுவதால்) பரிசோதனை என எல்லாமே இந்த சிகிச்சையின் செலவை அதிகரிக்கும்.

எம்பிரியோ என்றால் என்ன?

கருமுட்டையையும் விந்தணுக்களும் சேர்ந்து உருவாக கூடிய கருதான் எம்பிரியோ என்று அழைக்கப்படுகிறது. இவை இணைந்து வளர தொடங்கும் அடுத்த நாள் முதல் ஐந்து நாட்கள் வரை தொடர்ந்து அதன் வளர்ச்சி கண்காணிக்கப்படும். ஐந்தாவது நாட்களில் வளர்ச்சியடைந்த எம்பிரியோ ஆனது பிளாஸ்டோசிஸ்ட் என்று சொல்லப்படும். இந்த ஐந்து நாளில் நல்ல வளர்ச்சி இருந்தால் அந்த எம்பிரியோ வளர்ச்சி சிறப்பாக இருப்பதை உணர்த்தும். இது கருத்தரித்தலை வெற்றியாக்கும்.

ஒவ்வொரு எம்பிரியோவுக்கும் கிரேடு உண்டு. கிரேடு ஏ, கிரேடு பி, கிரேடு சி. ஏ என்பது நல்ல தரமானது. பி கிரேடு என்பதும் ஓகே. சி கிரேடு என்பது மோசமானது. இதை நிராகரித்துவிடுவார்கள். 3 ஆம் நாளில் இருந்து 5 நாளுக்குள் தரமான எம்பிரியோ உள்வைப்பது நடக்கும்.

எம்பிரியோ உள்வைக்கும் முறையில் 3 அல்லது 4 எம்பிரியோ முன்பு வைத்தார்கள். தற்போது நவீன மருத்துவ சிகிச்சை இருப்பதால் ஒன்று அல்லது இரண்டு எம்பிரியோ மட்டுமே வைக்கப்படுகிறது. அதனால் தான் இரட்டைகுழந்தைகள் ஐவிஎஃப் சிகிச்சையில் அதிகமாக உள்ளது.

ஐவிஎஃப் சிகிச்சையில் கருப்பை வாய் தையல் தேவையா?

ஐவிஎஃப் முறையில் கருவுற்றதும் கருப்பை வாய் பகுதியில் தையல் அவசியம் என்று சொல்வது உண்மை அல்ல. கருப்பை வாய் அளவு எப்படி உள்ளது ஏற்கனவே 18, 20 வாரங்களுக்குள் கருச்சிதைவு நடந்தால் அந்த நேரத்தில் அளவு பார்த்து தேவையெனில் மட்டுமே சின்னதாக இருந்தால் ஸ்ட்ரிச் செய்ய வேண்டியதிருக்கும். எல்லோருக்குமே இது தேவையானதல்ல.

ஐவிஎஃப் சிகிச்சையால் உடல் பாதிக்குமா?

சிலருக்கு ஐவிஎஃப் சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் ஊசியால் கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் பாதிக்கப்படும் புற்றுநோய் வரலாம் என்றெல்லாம் கவலை கொள்கிறார்கள். ஆனால் ஹார்மோன் ஊசி என்பதால் எந்தவிதமான பக்கவிளைவும் இதில் வராது. மாறாக வேறு சில பிரச்சனைகள் வரலாம். தினமும் ஊசி எடுப்பதால் இடுப்பில் மட்டும் அல்லாமல்,தொடை, வயிறு பகுதிகளிலும் ஊசி போடுவதுண்டு.அதனால் அந்த இடத்தில் மட்டும் வலி, சரும நிற மாற்றம் உண்டாகும். கருமுட்டை வளரும் போது வயிறு உப்புசம் போன்று இருக்கும். அவ்வளவு தான்.

இதுவரை இது குறித்த ஆய்வுகளில் கூட இவை புற்றுநோய் உண்டாக்கும் என்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே தெரிவித்துள்ளது.

ஐவிஎஃப் வெற்றி விகிதம் என்பது எப்படி இருக்கும்?

ஐவிஎஃப் சிகிச்சை என்பதின் வெற்றி விகிதமானது 30 முதல் 40% வரை என்று சொல்லலாம். கருமுட்டை பிரச்சனை இல்லை, கருப்பை பிரச்சனை இல்லை, விந்தணுக்கள் பிரச்சனை இல்லை. எல்லாமே நார்மலாக இருக்கு என்னும் போது எம்பிரியோ உள் வைப்பு வைக்கும் போது அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

ஒரு முறை செய்து கருத்தரிப்பு இல்லையென்றால் சோர்ந்து போக வேண்டாம். ஐந்து வருடங்களில் சுழற்சி முறையாக மூன்று முறை செய்யலாம். பெண்ணின் உடல் ஆரோக்கியம் பொறுத்து இந்த வெற்றி விகிதம் மாறுபடலாம்.

நீரிழிவு, உடல் பருமன், ஹார்மோன் கோளாறு, அதிக வயது போன்றவை கூட ஐவிஎஃப் வெற்றிவிகிதத்தை பாதிக்கலாம். எல்லாமே சரியாக இருந்தாலும் அதிக வயதாகும் போது கருமுட்டை எண்ணிக்கை குறைய வாய்ப்புண்டு. இவர்களுக்கு இரத்தப்பரிசோதனை மூலம் இந்த கரு முட்டை எண்ணிக்கை பரிசோதிக்கப்படும். சில பெண்களுக்கு 30 வயதில் கூட கருமுட்டை குறையலாம். இவர்களுக்கு ஐவிஎஃப் சிகிச்சை மூலம் தான் கருத்தரிப்பு சாத்தியமாகும்.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!

ஐவிஎஃப் சிகிச்சையில் டோனர் என்பது என்ன?

ஐவிஎஃப் சிகிச்சை செய்து கொள்ளும் போது அவை வெற்றி தரவில்லை எனில் உடனே தானம் செய்ய கருமுட்டை அல்லது விந்தணுக்கள் தேவைப்படும் என்று நினைக்கிறார்கள் ஆனால் இது அப்படி அல்ல.

சில பெண்ணுக்கு கருமுட்டை குறைவாக இருக்கும் போது, தரமானதாக இல்லாத போது மருத்துவரே பரிந்துரைப்பார். ஆண்களை பொறுத்தவரை விந்தணுக்கள் இல்லை அல்லது உள்ளிருந்து வெளியில் வரவில்லை, சில நேரங்களில் விந்தணுக்கள் இல்லை என்னும் போது விந்து தானம் பெறுவதற்கு மருத்துவர் பரிந்துரைப்பார்.

யாருக்கு வாடகை தாய் அவசியம்?

ஐவிஎஃப் சிகிச்சையில் வெற்றிபெறாத போது வாடகை தாய் தான் தேவை என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அப்படி அல்ல. கருமுட்டை, விந்தணுக்கள் என்பதை தாண்டி கருப்பையின் அளவு, வடிவம், உருவம் போன்றவற்றிலோ கருப்பை பிரச்சனை இருந்தாலோ அதாவது கரு வளர்வதற்கு போதுமான இடமின்மை போன்ற பிரச்சனை இருந்தாலோ மருத்துவரே வாடகை தாய் பரிந்துரைப்பார்.

ஐவிஎஃப் செய்துகொண்ட பிறகு செய்ய வேண்டியவை? செய்ய கூடாதவை?

ஐவிஎஃப் செய்து கொண்ட பிறகு இயல்பாகவே இருக்கலாம். பெட் ரெஸ்ட் தேவையில்லை. ஆனால் அதிக எடை தூக்க கூடாது. பக்கெட் தண்ணீர், சிலிண்டர் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். வேலை செய்யும் பெண்கள் கூட கருத்தரித்தல் நிகழும் வரை வேலைக்கு செல்ல மாட்டார்கள் அப்படி இல்லாமல் மருத்துவரின் ஆலோசனையோடு சிறிய வேலைகளை செய்யலாம்.

உணவை பொறுத்தவரை பப்பாளி, துரித உணவுகள், அன்னாசிப்பழம், ப்ராய்லர் சிக்கன் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியமான உணவுகள் எடுக்கலாம்.

பயணங்களாக இருந்தால் குலுக்கல் மிகுந்த பாதைகளில் வாகனங்களில் செல்ல கூடாது. ட்ரெயின் அல்லது விமானம் பாதுகாப்பானதாக இருக்கும். எதுவாக இருந்தாலும் 4 மணி நேரத்துக்கு மேல் பயணம் வேண்டாம்.

5/5 - (170 votes)

பொதுத்துறப்பு

பொதுத்துறப்பு ஜம்மி ஸ்கேன்ஸ் (Jammi Scans) வழங்கும் கட்டுரைகள், தகவல்கள், வீடியோக்கள் போன்றவை தகவல் தொடர்பு நோக்கங்களுக்காக மட்டுமே. இவை எல்லாமே மகப்பேறு மருத்துவர்கள், ஸ்கேன் பரிசோதனை நிபுணர்கள், அதற்கான நடைமுறைகள் போன்றவை நிபுணர்களால் வழங்கப்படும் பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எங்கள் இணையதளத்தில் இருக்கும் கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் பொதுவான விஷயங்கள் குறித்து மட்டுமே வழங்கப்படுகின்றன. வீடியோக்களில் இருக்கும் தகவல்களும் , கட்டுரைகளும் தனிப்பட்ட நபர்களுக்கான நோயறிதல் குறித்தவை என்று கருதக்கூடாது. அதனால் இதன் வாயிலாக வெளியிடப்படும் சிகிச்சை முறைகளை சுயமாக செய்து கொள்ள கூடாது. ஜம்மி ஸ்கேன்ஸ் தளத்தில் வெளியான கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் மூலம் நோயறிதலையும், சிகிச்சையையும் சுயமாக செய்து கொள்ள கூடாது. மாறாக உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனை செய்த பிறகு உரிய சிகிச்சை பெறுவது நல்லது. ஜம்மி ஸ்கேன்ஸ் உருவாக்கும் (இணையதளம் மற்றும் அச்சு) தகவல்கள் மருத்துவ ரீதியிலான பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எந்தவொரு தனி நபருக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் கட்டுரைகள் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி கூறுகிறோம். அதனால் தனிப்பட்ட முறையில் சுயமாக ஒருவர் சிகிச்சை கொள்வதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது என்பதையும் இத்தருணத்தில் உறுதி அளிக்கிறோம். ******** உங்களின் பாதுகாப்பை எங்களின் முன்னுரிமையாகக் கருதி, குறைந்தபட்ச நபர்களுடன் செல்லுமாறு ஜம்மி ஸ்கேன்ஸ் கேட்டுக்கொள்கிறது. PC-PNDT சட்டத்தின்படி, உங்களுடன் வரும் நபர்கள் ஸ்கேன் அறைக்குள் உங்களுடன் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பானதாக்க இந்த கடினமான காலங்களில் நீங்கள் எங்களுடன் ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறோம்.
Share This Article
Follow:
டாக்டர். தீப்தி ஜம்மி (இயக்குனர், ஜம்மி ஸ்கேன்கள்) எம்.பி.பி.எஸ்., எம்.எஸ் (மகப்பேறு மற்றும் பெண்ணோயியல்) கரு மருத்துவத்தில் பிந்தைய முனைவர் பெல்லோஷிப் டாக்டர்.தீப்தி சர்வதேச மற்றும் தேசிய மாநாடுகளில் கரு மருத்துவத்தில் தங்கப் பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார், மேலும் பல மதிப்புமிக்க பிராந்திய இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி நேர்காணல்களில் தோன்றியுள்ளார்.
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »