கர்ப்ப காலத்தில் வெரிகோஸ் வெயின் (Varicose Veins During Pregnancy in Tamil) வருவதை எப்படி தவிர்ப்பது?
கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் வெரிகோஸ் பிரச்சனை (Varicose Veins During Pregnancy in Tamil) இயல்பாக சந்திக்கிறார்கள்.
பெரும்பாலும் இது குறித்த விழிப்புணர்வை அவர்கள் அறிவதில்லை என்றே சொல்ல வேண்டும். வெரிகோஸ் வெயின் என்றால் என்ன என்பதை முதலில் அறிந்துகொள்வோம்.
வெரிகோஸ் வெயின் என்றால்?
நரம்புகள் வீங்கி பருத்துவிடுவதை தான் வெரிகோஸ் வெயின் என்று சொல்கிறோம். வழக்கத்துக்கு மாறாக நரம்புகள் வீங்கி சருமத்தின் மேற்பரப்புக்கு அருகில் வீக்கமடையக்கூடும். இது நீலம், சிவப்பு அல்லது ஊதா நிறங்களில் நரம்புகள் மெல்லியதாகவோ அல்லது கயிறு போன்று முறுக்கியோ இருக்க கூடும். இது பெரும்பாலும் கால்களில் தான் அதிகமாக இருக்கும்.
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் இடுப்பு பகுதி, பிட்டம் மற்றும் உடலில் வேறு சில இடங்களிலும் இந்த வெரிகோஸ் வெயின் (Varicose Veins) கொண்டிருக்க கூடும். இது சுருள் சிரை நாளங்கள் என்று அழைக்கப்படுகிறது.
கர்ப்பிணிகளுக்கு வீங்கி பருத்து இருக்கும் நரம்புகள் மோசமான நிலையில் இருக்கும். இது கர்ப்ப காலத்தில் கால்களில் இருந்தால் கால்கள் கனமாக உணர வைக்கும்.
இந்த நரம்பு இருக்கும் இடங்களை சுற்றி எரிச்சல், நமைச்சல் போன்றவற்றை உண்டாக்கும். இந்த அறிகுறிகள் நாளுக்கு நாள் மோசமாக கூடும். கால்களில் அதிக இடங்களில் இவை இருந்தால் இன்னும் நிறைய அறிகுறிகளை உண்டாக்க கூடும்.
வெரிகோஸ் வெயின் எதனால் உண்டாகிறது?
கர்ப்பப்பை வளரும் போது உங்கள் உடலின் வலது பக்கத்தில் பெரிய நரம்பு அழுத்தம் கொடுக்கிறது. இது கால் நரம்புகளில் அதிக அழுத்தத்தை கொடுக்கிறது.
இதையும் தெரிந்து கொள்ள: பிரசவத்திற்குப் பிறகு உடல் எடையைக் குறைக்க 5 குறிப்புகள்
நரம்புகள் ரத்தத்தை இதயத்துக்கு திருப்பும் ரத்த நாளங்கள். கால் நரம்புகளில் உள்ள ரத்தம் ஏற்கனவே ஈர்ப்புக்கு எதிராக செயல்படும் நிலையில் கர்ப்பமாஅக் இருக்கும் போது உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிக்க கூடும் இது நரம்புகளில் சுமையை அதிகரிக்கிறது.
மேலும் கர்ப்பகாலத்தில் கர்ப்பிணியின் உடலில் புரோஜெஸ்டிரான் அளவு உயரக்கூடும். இது ரத்த நாளங்களின் சுவர்களை தளர்த்திவிடுகிறது.
கர்ப்பிணியின் குடும்ப வரலாற்றில் யாருக்கேனும் வெரிகோஸ் வெயின் பிரச்சனை முன்னரே இருந்தால் அது இவர்களையும் பெருமளவு பாதிக்க வாய்ப்புண்டு. அதிலும் ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு அதிகமாக உண்டாகிறது.
முதல் கர்ப்பத்தில் வெரிகோஸ் வெயினால் பெண்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு அடுத்தடுத்த கர்ப்பத்திலும் இந்த பாதிப்பு அதிகரிக்கவே செய்கிறது.
கர்ப்பிணி ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை சுமந்தாலும் அவர்களுக்கும் வெரிகோஸ் வெயின் பிரச்சனை எளிதாக வரக்கூடும். சில கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் அதிக எடையோடு இருப்பார்கள்.
இவர்களுக்கும் வெரிகோஸ் வெயின் வர வாய்ப்புண்டு. சில கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் நீண்ட நேரம் நின்று கொண்டே இருப்பார்கள்.
இவர்களுக்கும் இந்த நிலை உண்டாக வாய்ப்புண்டு. பெரும்பாலும் இவை பிரசவக்காலத்துக்கு பிறகு மறையக்கூடும் என்றாலும் சிலருக்கு பிரசவக்காலத்துக்கு பிறகு அதிகரிக்க கூடும்.
கர்ப்ப காலத்தில் வீங்கி பருத்து வலிக்கும் நரம்புகள் வராமல் எப்படி தடுப்பது என்று கர்ப்பிணிகள் தெரிந்துகொள்வது அவசியம்.
கர்ப்பமாக இருக்கும் போது தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். வியர்த்து விறுவிறுப்பான பயிற்சி செய்யவில்லை என்றாலும் வேகமான நடை கூட இதை வராமல் தவிர்க்க முடியும்.
உடற்பயிற்சி செய்வதோடு உடல் எடையையும் கட்டுக்குள் வைக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு ட்ரைமெஸ்டரிலும் ஒவ்வொரு குறிப்பிட்ட அளவு மட்டுமே எடை அதிகரிக்க வேண்டும்.
மருத்துவர் அறிவுறுத்தும் அளவை காட்டிலும் அதிக எடை அதிகரிக்காமல் இருக்க வேண்டும்.
கண்டிப்பாக இதில் கவனம் இருக்க வேண்டும். ஏனெனில் அதிக உடல் எடை பிரசவம் சுகமாவதில் சிக்கல் உண்டாக்கும் என்பதோடு வெரிகோஸ் வெயின் பிரச்சனையையும் உண்டாக்கும்.
கர்ப்ப காலத்தில் உட்காரும் போதெல்லாம் கால்களை கீழே வைக்காமல் எந்த அளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு உயர்த்தி வைப்பதன் மூலம் வெரிகோஸ் வெயின் வராமல் தவிர்க்கலாம்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
இப்போது கர்ப்பிணிகள் மலம் கழிக்க இந்தியன் டாய்லெட் தவிர்த்து வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துகிறார்கள். குத்துகாலிட்டு அமரும் இந்தியன் டாய்லெட் பயன்படுத்தினால் இது மலச்சிக்கல் பிரச்சனை தவிர்க்க உதவுவதோடு வெரிகோஸ் வெயின் வலியையும் தவிர்க்க உதவும்.
தூங்கும் போதும் கால்களை கீழாக வைக்காமல் தலையணை வைத்து அதன் மேல் கால்கள் வைத்து தூங்குவதன் மூலம் வெரிகோஸ் வெயின் வராமல் தவிர்க்கலாம்.
இதையும் தெரிந்து கொள்ள: கர்ப்ப காலத்தில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது சாதாரணமா? ஏன்?
கர்ப்ப காலத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டோ அல்லது நின்று கொண்டோ இருப்பதன் மூலமும் இவை வரக்கூடும் என்பதால் இதை தவிர்க்க வேண்டும்.
அல்லது இடையிடையே எழுந்து நடப்பதன் மூலமும் இதை தவிர்க்கலாம். தற்போது இந்த வெரிகோஸ் வெயின் பிரச்சனைகளுக்கு காலுறைகள் கிடைக்கிறது.
இவை நரம்புகளுக்கு அழுத்தம் கொடுத்து கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க கூடும். காலுறைகளில் மூன்று விதமான காலுறைகள் கிடைக்கிறது. உங்களுக்கேற்றவற்றை மருத்துவரின் ஆலோசனையோடு தேர்வு செய்து அணியலாம்.