மென்சுரல் கப் என்றால் என்ன? யாரெல்லாம் உபயோகிக்கலாம், நன்மைகள் என்ன?

810
Menstrual Cups

ஒவ்வொரு பெண்களும் பூப்படைந்த காலம் முதல் மெனோபாஸ் காலம் வரை மாதவிடாய் சுழற்சியை எதிர்கொள்கிறார்கள்.

இந்த நாட்கள் வலி மிகுந்தவை அல்ல ஆனால் அசெளகரியம் மிகுந்தவை. உதிரபோக்கு ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். இந்த நேரத்தில் பயன்படுத்தும் பொருள்கள் குறித்தும் கவனமாக இருக்க வேண்டும்.

முன்னோர்கள் காலத்தில் துணிகளை பயன்படுத்தி வந்தவர்கள் பிறகு நாப்கினுக்கு மாறினார்கள். தற்போது பெருமளவு நாப்கின் பயன்பாடு இருந்தாலும் அதை தொடர்ந்து டேம்பன், மென்சுரல் கப் பயன்படுத்துவதும் உண்டு. இந்த மென்சுரல் கப் பயன்பாடு குறித்து தான் இப்போது பார்க்க போகிறோம்.

மென்சுரல் கப் (Menstrual Cup in Tamil) என்றால் என்ன?

இது மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பெண்களுக்கான பிரத்யேக தயாரிப்பு ஆகும்.

மென்சுரல் கப் சிறிய நெகிழ்வான கோப்பை சிலிகான் அல்லது லேடெக்ஸ் ரப்பரால் ஆனது. இது பார்க்க புனல் வடிவத்தில் இருக்கும். இது மாதவிடாய் திரவத்தை பிடிக்கவும் சேகரிக்கவும் பயன்படும். நாப்கின் போன்று இரத்தத்தை உறிஞ்சாமல் சேகரித்து வைக்கும்.

மென்சுரல் கப் (Menstrual Cup in Tamil) பயன்படுத்தும் போது அதிக உதிரபோக்கையும் அது சேமிக்க கூடும். இதனால் நாப்கின், டேம்பன் போன்று இல்லாமல் இது சுற்றுசூழல் நட்பு பொருளாகவும் செயல்படுகிறது. உதிரபோக்கு அளவை பொறுத்து நீங்கள் 12 மணி நேரம் வரை கூட இந்த கப் வைத்திருக்கலாம்.

மென்சுரல் கப் பல வகைகளில் கிடைக்கிறது. கீப்பர் கப், மூன் கப் லுனெக்ட் மென்ஸ்ட்ரல் கோப்பை, திவாகப் லீனா கப் மற்றும் லில்லி கப் போன்றவை மீண்டும் பயன்படுத்தக்கூடிய கோப்பைகளின் வடிவங்கள். மேலும் சஃப்ட் கப் -களும் கடைகளில் கிடைக்கிறது. சில வகைகள் செலவழிக்ககூடியவை. ஆனால் மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் இதை தயக்கமில்லாமல் வாங்கலாம்.

மேலும் இதையும் தெரிந்து கொள்ளுங்கள்: மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி நீங்க டிப்ஸ்

மென்சுரல் கப் (Menstrual Cup in Tamil) எப்படி பயன்படுத்துவது?

மாதவிடாய் சுழற்சியின் போது நீங்கள் நாப்கினுக்கு மாற்றாக டேம்பன் பயன்படுத்தி இருந்தால் மென்சுரல் கப் பயன்பாடு எளிதானது. மென்சுரல் கப் புதிதாக பயன்படுத்துபவர்கள் இந்த படிகளை பின்பற்றுங்கள்.

முதல் முறையாக மென்சுரல் கப் பயன்படுத்தினால் அது சங்கடமாக இருக்கும். அதனால் கப்பின் விளிம்பில் சுத்தமான எண்ணெய் அல்லது லூப்ரிகண்ட் பயன்படுத்தி உயவூட்டவும். ஈரமான மாதவிடாய் கோப்பை செருகுவதற்கு எளிதானது.

கைகளை நன்றாக கழுவி கொள்ளுங்கள். கோப்பையின் விளிம்பு பகுதியில் தண்ணீர் அல்லது நீர் சார்ந்த லூப் தடவ வேண்டும். இது மேலும் நெகிழ உதவும். இந்த மென்சுரல் கப் இறுக்கமாக பாதியாக மடித்து விளிம்பை மேல் எதிர்கொள்ளும் வகையில் கைகளால் பிடிக்கவும். இதை யோனிக்குள் செருகவும். கருப்பை வாய்க்கு கீழ் சில அங்குலம் இவை உட்கார வேண்டும். இது யோனிக்குள் நுழைந்தது. அந்த இறுக்கத்தை விடவும்.

இந்த மென்சுரல் கப் சரியாக பயன்படுத்தி இருந்தால் நீங்கள் யோனிக்குள் கப் இருப்பதை உணர மாட்டீர்கள். கோப்பை வெளியே விழாமல் நகரவும், குதிக்கவும், உட்காரவும், நிற்கவும் அன்றாட வேலைகளை செய்யவும் உங்களால் முடியும்.

மென்சுரல் கப் (Menstrual Cup) பயன்படுத்துவதில் சிக்கல் இருந்தால் மருத்துவரை அணுகுங்கள்.

மென்சுரல் கப் (Menstrual Cup in Tamil)எப்படி எடுப்பது?

மென்சுரல் கப் பயன்படுத்திய பிறகு இதை எப்படி எடுப்பது, கைகளை நன்றாக கழுவி விடவும். ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும் பிறப்புறுப்பில் வைக்கவும். அடித்தளத்தை அடையும் வரை கோப்பையின் புனல் போன்ற அமைப்பின் அடிப்பாகத்தை மெதுவாக இழுக்கவும். பிறகு அடித்தளத்தை இலேசாக வெளியே அகற்றி அவை வெளியேறியதும் மென்சுரல் கப்பில் இருக்கும் உதிரத்தை வெளியேற்றவும்.

மென்சுரல் கப் (Menstrual Cup in Tamil)சுத்தம் செய்யும் முறை!

மாதவிடாய் சுழற்சி காலத்தில் மென்சுரல் கப் ஆனது மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடியவை. ஒவ்வொரு முறையும் மாதவிடாய் சுழற்சி முடிவடைந்த பிறகு, மென்சுரல் கப் எடுத்து சுத்தமான வெந்நீரில் கொதிக்க வைத்து நன்றாக வெயிலில் உலர்த்தி அதற்குரிய உறையில் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். அந்தரங்கமான இடத்தில் வைப்பதால் கிருமித்தொற்றில்லாமல் சுத்தமாக வைக்க வேண்டும்.

ஒவ்வொரு முறை யோனிக்குள் செருகும் போதும் அது நன்றாக கழுவி சுத்தமாக துடைக்க வேண்டும். கோப்பை நாள் ஒன்றுக்கு இரண்டு முறையாவது மாற்ற வேண்டும்.

யாரெல்லாம் மென்சுரல் கப் பயன்படுத்தலாம்?

மென்சுரல் கப் நீங்கள் பயன்படுத்த விரும்பினால் மகளிர் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. உங்களுக்கு எந்த அளவு தேவை என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். பெரும்பாலும் இவை பெரிய மற்றும் சிறிய அளவில் விற்கின்றன.

 1. உங்கள் வயது
 2. உங்கள் கருப்பை
 3. கருப்பை வாய் நீளம்
 4. உதிரபோக்கு அளவு
 5. மென்சுரல் கப் உறுதி
 6. இடுப்பு தசைகளின் வலிமை
 7. சுகப்பிரசவம் இருந்தால்
 8. பிரசவம் ஆகாத 30 வயதுக்கு குறைவான பெண்களுக்கு சிறிய மென்சுரல் கப் பரிந்துரைக்கப்படுகிறது. பெரிய அளவுகள் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகின்றன.

மென்சுரல் கப் எவ்வளவு நாள் வரை பயன்படுத்தலாம்

இவை நீடித்து பயன்படுத்தக்கூடியவை. 6 மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரை இவை நீடிக்கும். எனினும் நீங்கள் வாங்கும் மென்சுரல் கப் வகைகள் பொறுத்து இவை மாறுபடலாம். பயன்பாட்டுக்கு குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு இதை பயன்படுத்த வேண்டாம்.

மேலும் இதையும் தெரிந்து கொள்ளுங்கள்: அதிக இரத்தபோக்கு எதனால் உருவாகிறது?

மென்சுரல் கப் பயன்படுத்துவதால் என்ன மாதிரியான நன்மைகள் கிடைக்கும்?

மென்சுரல் கப் (Menstrual Cup in Tamil) மலிவு விலையில் கிடைக்கிறது. இதன் விலை அதிகம் என்றாலும் மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதை கணக்கிடும் போது அது மலிவானது தான். இது டாம்பன்கள் (Tampons) பயன்படுத்துவதை விட பாதுகாப்பானது.

 • நாப்கின் மற்றும் டாம்பன்களை விட மென்சுரல் கப் பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு சிறந்தது.
 • அதிக உதிரபோக்கு என்றாலும் மென்சுரல் கப் அசெளகரியம் அளிக்காது.
 • இதை கருத்தடை சாதனம் ஐயூடி உடன் அணியலாம்.
 • உடலுறவின் போது உணர முடியாது.
 • மென்சுரல் கப் பெரும்பாலான பெண்களின் விருப்பமாக உள்ளது. இது டேம்பன் போல் அல்லாமல் மீண்டும் பயன்படுத்தக்கூடியவை. ஒரு முறை விலை கொடுத்து வாங்கினால் நீண்ட காலம் பயன்படுத்தலாம்.
 • மென்சுரல் கப் பாதுகாப்பானவை. இது இரத்தத்தை உறிஞ்சுகொள்ளாமல் சேகரிக்கிறது. இதனால் இரத்தம் உறிஞ்சும் டேம்பன், நாப்கின் போன்று தொற்று பரவுவதற்கு வாய்ப்பு இல்லை.
 • தொற்று நச்சு அதிர்ச்சி நோய்க்குறி பெறும் அபாயம் இல்லை. இந்த மென்சுரல் கப் ஆனது ஒன்று முதல் இரண்டு அவுன்ஸ் வரை உதிரத்தை வைத்திருக்கும்.
 • டேம்பன் பயன்பாடு ஒரு அவுன்ஸிலும் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே வைத்திருக்க முடியும். இது சுற்றுப்புற சூழலுக்கு உகந்தவை அல்ல.
 • மென்சுரல் கப் அணியும் போதும் உறவில் நெருக்கமாக இருக்கலாம். கசிவுகள் குறித்து கவலை கொள்ள வேண்டியதில்லை.

மென்சுரல் கப் பயன்பாடு கருத்தடை சாதனமான ஐயூடி- அகற்றும் என்று சில நிறுவனங்கள் கூறியது. ஆனால் 2012 ஆம் ஆண்டு ஆய்வு ஒன்று அதை உண்மையில்லை என்று நிராகரித்தது.

மென்சுரல் கப் பயன்படுத்துவதால் என்ன மாதிரியான தீமைகள் உண்டாகும்?

மென்சுரல் கப் பயன்பாடு குழப்பமானதாக இருக்கலாம். செருகுவது அல்லது அகற்றுவது சிலருக்கு கடினமாக இருக்கும். சரியான பொருத்தத்தை கண்டறிவது சிரமமாக இருக்கலாம்.

சிலருக்கு ஒவ்வாமை எதிர்வினை உண்டாகலாம். பிறப்புறுப்பு எரிச்சல் ஏற்படலாம்.

சில நேரங்களில் மென்சுரல் கப் அகற்றும் போது கசிவு உண்டாகலாம். செயல்முறையின் போது கசிவுகளை தவிர்க்க முடியாது. இதை செருகுவதற்கு அல்லது அகற்றுவதற்கு கடினமாக இருக்கும். காரணம் நீங்கள் சரியான அளவை அணிந்திருக்க மாட்டீர்கள்.

மென்சுரல் கப் சரியான மடிப்பை பெறாத நிலையை சில நேரங்களில் உணரலாம். கப்பை வெளியே இழுப்பது அடிப்பகுதியை கிள்ளுவது சிரமமாக இருக்கலாம்.

மென்சுரல் கப் (Menstrual Cups) எல்லாமே ஒரே அளவு கிடையாது. உங்கள் யோனிக்கும் சரியான ஒன்றை கண்டுப்பிடிப்பதற்கு முன்பு நீங்கள் சரியான பிராண்டுகளை முயற்சிக்க வேண்டியிருக்கும்.

பெரும்பாலான மென்சுரல் கப் லேடெக்ஸ் இல்லாத பொருள்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இது லேடெக்ஸ் ஒவ்வாமை இருப்பவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். ஆனால் சிலருக்கு சிலிக்கான் அல்லது ரப்பர் பொருள் ஒவ்வாமையை உண்டாக்கும் வாய்ப்பு உள்ளது. இது யோனி பகுதியில் எரிச்சலையும் அரிப்பையும் மற்றும் பெண் உறுப்பில் பிரச்சனைகள் கூட உண்டு செய்யலாம்.

மென்சுரல் கப் சரியாக சுத்தம் செய்து பராமரிக்கப்படாவிட்டால் யோனி எரிச்சல் அரிப்பு உண்டாகும். லூப்ரிகேஷன் இல்லாமல் கப் உள்ளே வைத்தால் அது அசெளகரியத்தை உண்டு செய்யலாம்.

மென்சுரல் கப் சரியாக சுத்தம் செய்யாத நிலையில் அது அந்தரங்க உறுப்பில் அதிக தொற்றை உண்டு செய்யலாம்.

அதனால் முறையாக மருத்துவரை அணுகி மென்சுரல் கப் பயன்படுத்துவது நல்லது.

மென்சுரல் கப் பயன்படுத்துவதை பற்றி மருத்துவர் கூறும் விளக்கம் என்ன என்பதையும் தெரிந்துகொள்ளுவோம்:

மென்சுரல் கப் குறித்து பெண்களிடம் வரவேற்பு அதிகரித்து வருகிறது மகிழ்ச்சியானது. இன்று பெண்கள் மாதவிடாய் சுழற்சி வந்தாலே அதன் அறிகுறி, அசெளகரியம் குறித்து அதிகமாக பயப்படுகிறார்கள்.

பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்பவர்கள் அடிக்கடி நாப்கின் அல்லது டேம்பன் பயன்படுத்துவது சிரமமாக இருக்கிறது என்பது தான் இவர்களது கவலைக்கு அதிக காரணம். ஏனெனில் உதிரபோக்கு அதிகம் இருந்தாலும் நாப்கின் முழுவதும் நனைந்தாலும் உடனடியாக மாற்ற முடியாத சூழலில் இருக்கிறார்கள். இவர்களுக்கு இந்த மென்சுரல் கப் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம்.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!

மென்சுரல் கப் சிலவற்றை பயன்படுத்தும் போது அது 10 முதல் 12 மணி நேரம் வரை உள் வைத்து பயன்படுத்தலாம். திருமணம் ஆகாத பெண்கள், திருமணம் ஆன பிறகு குழந்தை பேறு இல்லாத பெண்கள், இரண்டு குழந்தை பெற்ற பெண்கள், சிசேரியன் பிரசவம் எதிர்கொண்ட பெண்கள் என ஒவ்வொருவருக்கும் ஏற்ற அளவில் மென்சுரல் கப் கிடைக்கிறது.

அளவை பரிசோதிக்க நீங்கள் இரண்டு விதமான மென்சுரல் கப் வாங்கி பயன்படுத்த வேண்டும். இதை பயன்படுத்தும் போது உதிரபோக்கு ஆடையில் படிந்துவிடுமோ என்னும் பயம் இல்லாமல் இருக்கலாம். சரியான அளவை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள். இல்லையெனில் கசிவு வெளிப்புறமாக வருவதற்கும் வாய்ப்பு உண்டு. மென்சுரல் கப் பாதுகாப்பானது. உங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் என்று சொல்லலாம்.இது குறித்து உங்களுக்கு சந்தேகங்கள், தயக்கங்கள் இருந்தால் தயக்கமில்லாமல் மருத்துவரை அணுகுங்கள்.

5/5 - (1 vote)
டாக்டர். தீப்தி ஜம்மி (இயக்குனர், ஜம்மி ஸ்கேன்கள்) எம்.பி.பி.எஸ்., எம்.எஸ் (மகப்பேறு மற்றும் பெண்ணோயியல்) கரு மருத்துவத்தில் பிந்தைய முனைவர் பெல்லோஷிப் டாக்டர்.தீப்தி சர்வதேச மற்றும் தேசிய மாநாடுகளில் கரு மருத்துவத்தில் தங்கப் பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார், மேலும் பல மதிப்புமிக்க பிராந்திய இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி நேர்காணல்களில் தோன்றியுள்ளார்.