புதிய அம்மாக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய குறிப்புகள் மற்றும் தந்திரங்கள்:
குழந்தைகள் பிறந்ததும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து இளந்தாய்மார்களுக்கு சந்தேகம் இருக்கவே செய்யும். குழந்தையின் அழுகை முதல் குழந்தை பராமரிப்பு வரை எதைகண்டாலும் மனதில் ஒருவித அச்சம் இருக்கவே செய்யும். அம்மாவாக அது சரியானதும் கூட.
சுகப்பிரசவமாக இருந்தாலும், அறுவை சிகிச்சையாக இருந்தாலும் குழந்தை பிறந்த பிறகு மற்றுமொரு சவால் குழந்தை வளர்ப்பு தான். பல பெண்களும் குழந்தை பிறந்தவுடன் கர்ப்பகால அவஸ்தைகள் முடிந்துவிடுவதாக நினைக்கிறார்கள்.
ஆனால் தாய்மையின் பயணம் தொடங்கும் போது குழந்தை வளர்ப்பு குறித்து முழுவதும் தெரிந்துவைத்திருக்க வேண்டும். குறிப்பாக முதல் முறை தாயாகியிருக்கும் பெண்கள் அவசியம் தெரிந்துவைத்திருக்க வேண்டும்.
குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுதல்
பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் மிகவும் அவசியம் என்பதை மருத்துவர் குழந்தை பிறந்ததும் வலியுறுத்துவார். பிரசவித்தவுடன் குழந்தைக்கு தரக்கூடிய தாய்ப்பால் சீம்பால் என்று அழைக்கப்படுகிறது. இந்த பாலில் குழந்தைக்கு தேவையான எதிர்ப்புசக்தி கிடைக்கும் என்பதால் முதலில் வெளிவரும் மஞ்சள் நிற பாலை குழந்தைக்கு தவிர்க்காமல் கொடுக்க வேண்டும்.
தாய்ப்பால் கொடுக்கும் நிலை
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் நிலைகள் உண்டு. இளந்தாய்மார்கள் அனைவருமே செவிலியர் அல்லது மருத்துவரிடம் ஆலோசித்து குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் நிலையை தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் தாய்ப்பால் கொடுக்கும் முறையை அறிந்து சரியாக பின்பற்றும் போது தாய்ப்பால் சுரப்பும் கிடைக்கும். குழந்தைக்கும் தாய்க்கும் இடையேயான பிணைப்பு அதிகமாகும்.
குழந்தை அழுகை
குழந்தையின் அழுகை குறித்து சரியாக தெரியாது என்றாலும் ஓரளவேனும் அதன் அறிகுறிகள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். பசிக்கான அழுகை, டயபர் ஈர அழுகை, வயிற்றுவலிக்கான அழுகை, தூக்கத்துக்கான் அழுகை என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதையெல்லாம் தாண்டி குழந்தையின் அழுகை காய்ச்சல் அல்லது வேறு பிரச்சனைகளால் தீவிரமாக இருக்கும் போது என்ன செய்ய வேண்டும் என்பதை மருத்துவரிடம் கேட்டு அறிந்துகொள்வது அவசியம்.
குழந்தைக்கான தடுப்பூசி
பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி அட்டவணையை மருத்துவரே அளிப்பார் என்றாலும் அதை அம்மாக்களும் நினைவுபடுத்தி வாங்கி கொள்ள வேண்டும். சீரான இடைவெளியில் குழந்தைக்கு தடுப்பூசி போடுவதை நினைவுபடுத்தி முன்கூட்டியே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
குழந்தைக்கான மருந்துகள் பிறந்த நேரத்தில் இல்லை என்றாலும் அதிக காய்ச்சல், சளி, இருமல், தாய்ப்பால் குடிக்காத நிலை காலங்களில் அவசரத்துக்கு என்ன செய்ய வேண்டும். எப்போது சிகிச்சைக்கு மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்பதையும் ஆலோசித்து வைத்துகொள்வது நல்லது.
குழந்தை குளியல்
பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருந்தால் அடுத்த நாள் முதலே குளிக்க வைக்கலாம். ஆனால் அம்மாக்களால் குழந்தையை குளிப்பாட்டுவது சிரமமாக இருக்கும். வீட்டில் பெரியவர்கள் இல்லை என்றால் எப்படி குழந்தையை குளிக்க வைக்க வேண்டும் என்பதை பெற்றோர்கள் இருவருமே தெரிந்துவைத்துகொள்ள வேண்டும்.
குழந்தைக்கு மசாஜ் செய்யும் முறை, அதன் முக்கியத்துவம், தலைகுளியல், குளிக்க வைக்கும் முறை என அனைத்தையும் கற்றுகொள்வது நல்லது.
இதையும் தெரிந்து கொள்ள: கருத்தடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்!
குழந்தை சுத்தம்
எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது குழந்தையின் உடல் சுத்தம் தான். குழந்தை அடிக்கடி சிறுநீர் கழிக்க செய்வார்கள். அடிக்கடி மலம் கழிப்பார்கள். குழந்தைக்கு டயபர் பயன்படுத்துவதாக இருந்தால் சரியான இடைவெளியில் மாற்ற வேண்டும். எனினும் பிறந்த இரண்டு அல்லது மூன்று மாதங்கள் வரை இதை தவிர்ப்பதே நல்லது.
அதற்கு மாற்றாக பருத்தி துணிகளை குழந்தைக்கு பயன்படுத்துவது நல்லது ஒவ்வொரு முறை குழந்தை சிறுநீர் கழித்த பிறகு துணி மாற்றிவிட வேண்டும். அதே போன்று மலம் கழித்தால் கைகளை சுத்தமாக கழுவி மிதமான வெந்நீரில் நனைத்த துணியை கொண்டு துடைத்தால் கிருமித்தொற்று அண்டாமல் பாதுகாக்கலாம். உடல் நலனிலும் அக்கறை கொள்ளுங்கள்
பிரசவித்ததும் உடல் உறுப்புகள் பலவீனமாகி இருக்கும். அதற்கு போதுமான சத்துகள் தேவை கர்ப்ப காலம் போன்றே பிரசவித்த பிறகு உடல் ஆரோக்கியம் மேம்படவும் குழந்தைக்கு தாய்ப்பால் சுரப்பு சத்தாக இருக்கவும் உணவை திட்டமிட்டு எடுத்துகொள்ள வேண்டும்.
அதே நேரம் அம்மாக்கள் எடுத்துகொள்ளும் உணவு முறையில் இருந்துதான் குழந்தைக்கு தாய்ப்பாலில் சத்து செல்கிறது என்பதால் உணவில் கவனம் அவசியம். குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்படாமல் இருக்க கூடிய உணவுகளை தவிர்க்காமல் எடுத்துகொள்ள வேண்டும். இயன்றவரை உடலுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடிய உணவை எடுத்துகொள்வது நல்லது.
உதிரபோக்கு
பிரசவித்த பிறகு ஒவ்வொரு பெண்ணின் உடல்நிலையை பொறுத்து உதிரபோக்கு ஒரு வாரம் முதல் 15 நாட்கள் வரை கூட இருக்கலாம். இது இயல்பானது என்பதால் பயப்பட வேண்டியதில்லை. அதே நேரம் பெண்கள் தங்கள் அந்தரங்க உறுப்பை சுத்தமாக வைத்துகொள்ள வேண்டும். நாப்கின் சுத்தம், பிறப்புறுப்பு சுத்தம் என்பது இந்த நேரத்தில் தொற்றில்லாமல் வைத்திருக்க உதவும். நாப்கின் மாற்றூம் போது எல்லாம் மிதமான வெந்நீரில் கழூவினால் போதுமானது.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
மலச்சிக்கல்
கர்ப்பகாலம் போன்று பிரசவித்த பிறகு மலச்சிக்கல் பிரச்சனை வராமல் பார்த்துகொள்ள வேண்டும். இறுக்கமான கடினமான உணவுகளை சில வாரங்கள் தவிர்க்க வேண்டும். நார்ச்சத்து மிகுந்த உணவுகள் மலச்சிக்கல் இல்லாமல் செய்யும். தொடர்ந்து மலச்சிக்கல் இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.
உடல்பயிற்சி
பிரசவித்த உடன் உடற்பயிற்சி செய்யமுடியுமா என்று கேட்கலாம். ஆனால் மிதமான உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் எடை மேலும் அதிகரிக்காமல் பார்த்துகொள்ள முடியும். பிரசவித்த உடன் அம்மாக்களுக்கு இயற்கையாகவே மன அழுத்தம் உண்டாக கூடும்.
கர்ப்பகாலத்துக்கு பிறகு உடல் எடையை குறைக்க மற்றும் மன அழுத்தம் குறையவும், உடல் ஆரோக்கியம் சீராக இருக்கவும் உடல் பயிற்சி செய்யலாம். உங்கள் உடல் நிலையை மனதில் கொண்டு மருத்துவர் மற்றும் பயிற்சி நிபுணரின் ஆலோசனையோடு செய்ய வேண்டும்.