குழந்தைகளை தாக்கும் டவுன் சிண்ட்ரோம் என்றால் என்ன?

3936
What Is Down Syndrome

டவுன் சிண்ட்ரோம் (Down Syndrome) என்றால் என்ன?

மரபணு குறைபாடு காரணமாக குழந்தைகளுக்கு உண்டாகும் அரிதான பாதிப்பு தான் டவுன் சிண்ட்ரோம் (Down Syndrome) என்றழைக்கப்படுகிறது. 

மனித உடலில் ஒவ்வொரு செல்லிலும் இயல்பான 23 ஜோடி குரோமோசோம்கள் அதாவது 46 குரோமோசோம்கள் உண்டு.  சிலருக்கு 21 ஆம் ஜோடி குரோமோசோம்களில் ஒரு குரோமோசோம்கள் மட்டும் கூடுதலக இருக்கும். அவர்களுக்கு 47 குரோமோசோம்கள் இருக்கும். குழந்தை கருவில் வளரும் போதே இந்த குறைபாடு உண்டாகும் போது அந்த குழந்தை டவுன் சிண்ட்ரோம் (Down Syndrome) குழந்தையாக பிறக்கும். 

கர்ப்பகாலத்தில் டவுன் சிண்ட்ரோம் (Down Syndrome) பாதிப்பு இருப்பதை எப்படி எப்போது கண்டறிவது

கர்ப்பத்தின் மூன்றாவது மாதத்தில் அதாவது 11-14 வது வாரத்தில் என்.டி ஸ்கேன் செய்வதன் மூலம் இதை கண்டறியலாம்.

இந்த என்.டி ஸ்கேன் முடிவுகள், டவுன் சிண்ட்ரோம்(Down Syndrome) இருக்கும் வாய்ப்பு குறைவு, அதிகம் என வகைப்படுத்துகிறது.

என்.டி ஸ்கேன் ரிப்போர்ட்டில் டவுன் சிண்ட்ரோம் இருக்கும் வாய்ப்பு அதிகம் என வந்தால், உங்கள் மருத்துவர் உங்களுக்கு அம்னோசென்டெசிஸ் அல்லது கோரியோனிக் வில்லஸ் மாதிரி போன்ற பரிசோதனைகளை பரிந்துரைப்பார்.

டவுன் சிண்ட்ரோம் (Down Syndrome) வகைகள்

ட்ரைசோமி 21

ட்ரைசோமி 21  என்பது முதல் வகை ஆகும். இது மிகவும் பொதுவான வகை. உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் குரோமோசோம் 21 இன் பிரதிகள் மூன்று இருக்கும் (இரண்டு தான் இருக்க வேண்டும்)

டிரான்ஸ்லோகஷன் டவுண் சிண்ட்ரோம்

இந்த வகையில், ஒவ்வொரு செல்லிலும் குரோமோசோம் 21 இன் ஒரு பகுதி அல்லது முற்றிலும் ஒன்று கூடுதலாக இருக்கும். ஆனால் அது சொந்தமாக இருப்பதற்குப் பதிலாக மற்றொரு குரோமோசோமுடன் சேர்த்திருக்கும்.

மொசைக் டவுன் சிண்ட்ரோம்.

இது மிகவும் அரிதான வகையாகும். இதில் சில செல்களில் மட்டுமே குரோமோசோம்21 கூடுதலாக இருக்கும்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்: குழந்தைக்கு மலச்சிக்கல் அறிகுறிகள் மற்றும் தீர்வுகள்!

டவுண் சிண்ட்ரோம் (Down Syndrome) அறிகுறிகள்

டவுண் சிண்ட்ரோம் (Down Syndrome) குறைபாடு கொண்ட குழந்தையை கர்ப்பிணிகள் சுமந்தால் அவர்களுக்கு எந்தவிதமான அறிகுறியும் இருக்காது. பரிசோதனையின் மூலம் மட்டுமே கண்டறிய முடியும். இல்லையெனில்  குழந்தை பிறந்த பிறகு தான் அறிகுறிகளை வைத்து கண்டறிய முடியும்.

டவுன் சிண்ட்ரோம் குறைபாடோடு பிறக்கும் குழந்தைகள் இதற்கான அறிகுறிகளையும் கொண்டிருக்கலாம். இந்த குழந்தைகள்  கண்கள் பெரிதாக இருக்கும்.  மாறுக்கண்களாக இருக்கும், கண்களின் இமைகள் மிக சிறியதாக இருக்கும்.

தலை தட்டையாக இருக்கும். மூக்கும் தட்டையாக இருக்கும். குழந்தையின் காதுமடல்கள் மிகச்சிறியதாக இருக்கும். 

பாதங்கள் கைகள் சிறியதாகவும் உள்ளங்கையில்  ஒரு ரேகையும் இருக்கும். கழுத்து குறுகி இருக்கும். நாக்கு நீட்டியபடி இருக்கும்.இவர்களது வளர்ச்சி மெதுவாக இருக்கும். இவர்கள்  உயரம் குறைவாகவே வளர்வார்கள். 

இந்த டவுன் சிண்ட்ரோம் (Down Syndrome) குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு தைராய்டு சுரப்பு சரியாக வேலை செய்யாது. 

பிறவியிலேயே இதய குறைபாடுகள் கொண்டிருப்பார்கள். காது கேளாமை,மோசமான பார்வை, இடுப்பு பிரச்சனைகள், மலச்சிக்கல், தூக்கத்தில் மூச்சுத்திணறல உண்டாகும்.

தைராய்டு சுரப்பு குறைபாட்டால் மூளை, நரம்பு சார்ந்த கோளாறுகள் உண்டாக வாய்ப்புண்டு. 

இவர்களுக்கு இதயச்சுவரில் துளை, நுரையீரல் பாதிப்பு போன்ற பிறவிக்குறைபாடுகளும் உண்டாக வாய்ப்புண்டு சில குழந்தைகள் வளர்ந்த பிறகு  அல்சைமர் நோய்க்கு ஆளாக கூடும். டவுன் சிண்ட்ரோம் குறைபாடு இருப்பவர்களுக்கு சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் மற்றும் தோல் நோய்த்தொற்றுகள் உண்டாகலாம். 

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!

டவுண் சிண்ட்ரோம் சிகிச்சைகள்

டவுன் சிண்ட்ரோம் (Down Syndrome) குறைபாடோடு பிறக்கும் குழந்தைக்கு எந்தவிதமான சிகிச்சையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

டவுன் சிண்ட்ரோம் குறைபாட்டால் இதயம், நுரையீரல் போன்றவற்றில் பிறவிக் குறைபாடு இருந்தால் அவர்களுக்கு  தொடர் கவனிப்பும், உடல் பரிசோதனையும் தேவைப்படும். தைராய்டு  குறைபாடுகளுக்கு  குறிப்பிட்ட இடைவெளியில் ரத்தபரிசோதனை செய்ய வேண்டும்.

இந்த குழந்தை நன்றாக வளரும் காலக்கட்டம் வரை மருத்துவரின் ஆலோசனையோடு அவரது வழிகாட்டுதலில் தொடர வேண்டும். இவர்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் இவர்கள் தொற்றுநோய்கள், சாதாரண சளி  போன்றவை தொற்றாமல் இருக்க கவனமாக இருக்க வேண்டும். 

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்: பிறந்த குழந்தைக்கு ஒரு வயதாகும் வரை தவிர்க்க வேண்டிய விஷயங்கள்

முந்தைய காலத்தை காட்டிலும் இபோது டவுன் சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆயுள் அதிகரித்துள்ளது. 

டவுன் சிண்ட்ரோம் குறைபாடு கொண்ட குழந்தைகள் வளர்ச்சியில் கூடுதலாக பங்கெடுக்க வேண்டும். இவர்கள் கல்வி பயில முன்பு சிறப்பு பள்ளி இருந்தது.

தற்போது அவர்களும் சமமாக மற்ற குழந்தைகளோடு இணைந்து பழகும் போதும், கல்வி பயிலும் போதும் அவர்களது மூளை வளர்ச்சி பாதிப்படையாமல் இருக்கும் என்பதால் அவர்களையும் மற்ற குழந்தைகளோடு இணைத்தே  வளர்ப்பது அதிகரித்துவருகிறது.

முடிவுரை

டவுன் சிண்ட்ரோம் (Down Syndrome) குறைபாடோடு பிறக்கும் குழந்தைக்கு உடல் சார்ந்த பயிற்சிகள், பேச்சு பயிற்சிகள், கற்றலில் சற்று கூடுதல் கவனத்துடன் செயல்பட பயிற்சிகள், கற்றல், கேட்டல்  என அனைத்துமே  கூடுதலாக கிடைக்க வேண்டும்.

ஆனால் இந்த நோய்க்குறி கொண்ட குழந்தைகளை வளர்க்கும் போது கூடுதல்  கவனம் தேவை.

5/5 - (123 votes)
டாக்டர். தீப்தி ஜம்மி (இயக்குனர், ஜம்மி ஸ்கேன்கள்) எம்.பி.பி.எஸ்., எம்.எஸ் (மகப்பேறு மற்றும் பெண்ணோயியல்) கரு மருத்துவத்தில் பிந்தைய முனைவர் பெல்லோஷிப் டாக்டர்.தீப்தி சர்வதேச மற்றும் தேசிய மாநாடுகளில் கரு மருத்துவத்தில் தங்கப் பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார், மேலும் பல மதிப்புமிக்க பிராந்திய இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி நேர்காணல்களில் தோன்றியுள்ளார்.