கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு பெண்களும் சுகப்பிரசவத்தை தான் விரும்புவார்கள். கர்ப்ப காலத்தில் உடல் குறைபாடுகளால் சுகப்பிரசவத்துக்கு மாற்றாக சிசேரியன் செய்ய வேண்டிய சூழ்நிலை. குழந்தையின் உடலில் நஞ்சுக்கொடி சுற்றியிருக்கும் நிலை, பிரசவ நேரத்தில் அபாயம் போன்ற நிலைகளில் மருத்துவர்களே சிசேரியன் பிரசவத்தை அறிவுறுத்துவதுண்டு.
சிசேரியன் பிரசவம் வலி இல்லாமல் இருக்கும் என்றாலும் சிசேரியனுக்கு பிறகு (C-Section Recovery in tamil) வலியும் அசெளகரியங்களும் இளந்தாய்க்கு இருக்கவே செய்யும். சுகப்பிரசவத்துக்கு பிறகு உடல் விரைவாக இயல்பு நிலைக்கு திரும்பும். ஆனால் சிசேரியன் பிரசவத்திற்கு பிறகு உடல் இயல்பு நிலைக்கு திரும்ப தாய்மார்கள் அன்றாட வாழ்க்கை நிலைக்கு திரும்ப சற்று அவகாசம் எடுக்கவே செய்யும்.
சிசேரியன் மூலம் பிரசவித்த இளந்தாய்மார்கள் அதிலிருந்து மீண்டு வருவதற்கு என்ன செய்யலாம் என்ற குறிப்புகளை பார்க்கலாம். அதற்கு முன்பு இந்த சிசேரியன் பிரசவம் என்றால் என்ன என்பதை சுருக்கமாக தெரிந்துகொள்வோம்.
சுகப்பிரசவம் பாதுகாப்பாக செய்ய முடியாத போது குழந்தையை பெற்றெடுக்க பயன்படுத்தப்படும் ஒரு அறுவை சிகிச்சை முறையே சிசேரியன் அல்லது சி-பிரிவு சிகிச்சை ஆகும். அவசர நிலையில் இது செய்யப்படுகிறது. இந்த சிகிச்சையின் மூலம் கர்ப்பிணி பெண்ணின் வயிறு மற்றும் கருப்பையில் உள்ள கீறல்கள் மூலம் குழந்தையை வெளியே எடுக்கிறார்கள்.
நீங்கள் சிசேரியன் பிரிவை தேர்ந்தெடுத்தாலும் சரி அல்லது உடல் ஆரோக்கியத்தால் உங்களுக்கு சிசேரியன் செய்தாலும் சரி நீங்கள் விரைவில் அதிலிருந்து மீளவும், சரியாக செயல்படவும் என்ன செய்யலாம் என்ற குறிப்புகளை இப்போது பார்க்கலாம்.
சிசேரியனுக்கு பிறகு (C-Section Recovery) கவனத்தில் கொள்ள வேண்டியவை!
வலி மிகுந்த காலம்
சிசேரியன் பிரிவு கீறலை கவனமாக கையாள வேண்டும். தொடக்கத்தில் அசெளகரியமும் சோர்வும் தாண்டி வலி என்பதும் இருக்கவே செய்யும். வலியை கட்டுப்படுத்த மருத்துவர்கள் மருந்துகள் பரிந்துரைப்பார்கள் என்றாலும் வலியை இல்லாமல் செய்ய முடியாது. அரிப்பு இருக்கிறதே என்று சொரியக்கூடாது. ஆயின்மெண்ட் பயன்படுத்தலாம்.

முதல் இரண்டு வாரங்கள் வரை நீங்கள் வலி உணர்வை எதிர்கொள்ளலாம். உடல் ஆரோக்கியம் பொறுத்து நீங்கள் வலியை கூடுதலாகவோ குறைவாகவோ உணரலாம் என்றாலும் வலி தடுக்க முடியாது.
வலி நிவாரண மருந்துகளை மருத்துவர் பரிந்துரைப்பார் அதை மட்டும் நீங்கள் எடுத்தால் போதுமானது. சுயமாக எக்காரணம் கொண்டும் மருந்துகள் எடுக்க வேண்டாம்.
நோய்த்தொற்றின் அறிகுறிகளை கவனியுங்கள்
சிசேரியனுக்கு பிறகு (C-Section Recovery) நோய்த்தொற்றின் அறிகுறிகள் இருக்கிறதா என்பதை கவனியுங்கள். குறிப்பாக சிசேரியன் செய்த இடத்தில் கீறல், சிவப்பு, வீக்கம் அல்லது கசிவு வெளியேற்றம் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரிடம் செல்லுங்கள். அதிக அரிப்பு சிவப்பு புண் போன்றவை இருந்தாலும் ஆரம்பத்தில் கவனித்தால் தீவிரமாகாமல் தடுக்கலாம்.
சிசேரியன் செய்த இடத்தை சுத்தமாக வைத்திருங்கள். ஈரத்தன்மையுடன் வைத்திருக்க வேண்டாம். இதனால் தொற்றுகள் அதிகரிக்க செய்யலாம். சரியான இடைவெளியில் ஆயின்மெண்ட் பயன்படுத்துங்கள்.
ஓய்வு அவசியம்
சிசேரியன் பிரசவம் என்பது பெரிய சர்ஜரிதான். உடல் தன்னை தானே சரி செய்து கொள்ள அதிக நேரம் பிடிக்கலாம். அதனால் நேரம் கிடைக்கும் போது ஓய்வு என்று இல்லாமல் குறைந்தது ஒரு மாதத்துக்கு நன்றாக ஓய்வெடுங்கள். தூக்கம் இல்லையென்றாலும் ரிலாக்ஸான ஓய்வு அவசியம் தேவை.
குழந்தையை கவனிக்க, குழந்தைக்கு டயபர் மாற்ற என்று துணைக்கு உறவுகளை நாடுங்கள். இந்த ஓய்வு தான் உங்கள் உடல்நிலையை வேகமாக மீட்டெடுக்க செய்யும்.
தாய்ப்பால் கொடுக்கும் நிலை
சுகப்பிரசவமாக இருந்தாலும் தாய்ப்பால் கொடுக்கும் நிலையில் கவனம் இருக்க வேண்டும். சிசேரியன் என்பதால் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் முதல் இரண்டு வாரங்களுக்கு கனமான பொருள்களை தூக்க கூடாது.

வசதியான நிலையில் பக்கவாட்டில் ஒரு தலையணையை வைத்து அகலமான இடத்தில் வசதியாக உட்கார வேண்டும். முழங்கை வளைந்த நிலையில் குழந்தையை பக்கத்தில் பிடித்து கொள்ளுங்கள். குழந்தையின் தலையை தாங்கி உங்கள் மார்பகத்தை நோக்கி குழந்தையை அரவணைத்து கொள்ளுங்கள்.
குழந்தையின் முதுகு தலையணை மற்றும் உங்கள் முன்கையில் தங்கியிருக்கும். மற்றொரு கையால் மார்பகத்தை சி வடிவில் பிடித்துகொள்ளுங்கள். குழந்தையின் உதட்டில் மார்புக்காம்புகளை வைத்து குழந்தைக்கு தாய்ப்பால் கொடுங்கள். சிசேரியனுக்கு பிறகு பாலூட்டுதலில் சந்தேகம் இருந்தால் பாலூட்டும் மருத்துவரை அணுகுங்கள்.
பிறப்புறுப்பு வெளியேற்றம்
பிரசவத்துக்கு பிறகு கர்ப்பகாலத்தில் கருப்பையில் பொதிந்திருக்கும் மேலோட்டமான சளி சவ்வுகள் உதிரபோக்கு மற்றும் கருப்பை அழுக்குகள் வெளியேற தொடங்கும். இது வாரக்கணக்கில் சவ்வு மற்றும் உதிரபோக்கு வெளியேற்றம் இருக்கும்.
முதலில் கனமான உதிரபோக்கும் அதை தொடர்ந்து படிப்படியாக குறைந்து தண்ணீராக மாறி இளஞ்சிவப்பு பழுப்பு நிறத்தில் இருந்து மஞ்சள் கலந்த வெள்ளை நிறமாக மாறும். இது இரண்டு அல்லது மூன்று வாரங்கள் வரை இருக்கலாம் என்பதால் பயம் வேண்டாம்.
மாதவிடாய் சுருக்கம்
சிசேரியன் சிகிச்சைக்கு பிறகு (C-Section Recovery) முதல் சில நாட்களில் சுருக்கங்கள் இருக்கும். இது மாதவிடாய் பிடிப்பை ஒத்து இருக்கும். கருப்பையில் உள்ள இரத்த நாளங்களை அழுத்துவதன் மூலம் அதிகப்படியான இரத்தப்போக்கு தடுக்க உதவுகிறது.
ஆக்ஸிடாஸின் வெளியீட்டின் காரணமாக தாய்ப்பால் கொடுக்கும் போது வலி பொதுவானதாக இருக்கும். இத்தகைய தீவிர வலி இருந்தால் நீங்கள் வலி நிவாரணியை டாக்டரிடம் கேட்டு அவரது பரிந்துரையின் பெயரில் எடுக்கலாம்.
மென்மையான மார்பகங்கள்
மார்பகங்கள் சிசேரியனுக்கு பிறகு என்றில்லை சுகப்பிரசவத்துக்கு பிறகும் தாய்ப்பால் உற்பத்தி தொடங்கும் போது உறுதியான மற்றும் மென்மையானதாக மாறும். இரண்டு மார்பகங்களிலும் அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பது இந்த பிடிப்பை தவிர்க்க அல்லது குறைக்க பரிந்துரைக்கப்படுகிறது.
மார்பகங்களில் முலைக்காம்புகளை சுற்றியுள்ள தோலின் கருமையான வட்டங்கள் உள் அமுங்கியிருந்தால் குழந்தைக்கு தாய்ப்பால் உறிஞ்சுவது சிரமமாக இருக்கும். குழந்தைக்கு உணவளிக்கும் போது சிறிய அளவு பாலை வெளிப்படுத்த மார்பகத்தை அழுத்தி வெளிப்படுத்தலாம்.
தாய்ப்பால் குழந்தைக்கு போதுமான அளவு வரவில்லை என்றால் அதிக அழுத்தம் வேண்டாம். வெந்நீரில் நனைத்த துணியை ஒத்தடம் போல் கொடுங்கள்.
மனநிலையில் மாற்றம்
பிரசவத்துக்கு பிறகு சக்திவாய்ந்த உணர்ச்சிகளின் குழப்பத்தை தூண்டுகிறது. இதனால் இளந்தாய்மார்கள் மனச்சோர்வு, பதட்டம் அல்லது தூக்கம் போதுமானதாக இல்லை என்ற குறைபாடு ஏற்படும். ஹார்மோன் ஏற்ற தாழ்வுகளால் இந்நிலை உண்டாகிறது. சில நேரங்களில் அழுகை, மயக்கம் பதட்டம் போன்றவையும் தூங்குவதில் சிரமத்தையும் எதிர்கொள்வார்கள்.
இது சுகப்பிரசவத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் அல்ல சிசேரியன் பிரசவத்துக்கும் பிறகும் உண்டாகும். இதை எதிர்கொள்ள பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். துணையுடன் நேரம் செலவிடுங்கள். புத்தகம் படிக்க செய்யலாம்.
மனச்சோர்வு உண்டாகலாம்
சிசேரியன் பிரசவத்துக்கு பிறகு (C-Section Recovery) கடுமையான மனநிலை மாற்றங்கள், பசியின்மை அதிக சோர்வு மற்றும் வாழ்க்கையில் மகிழ்ச்சியின்மை உண்டாகலாம். பிரசவத்துக்கு பிறகு மனச்சோர்வு அதிகரிக்கலாம்.
சிசேரியன் வலியோடு இணைந்து மனச்சோர்வு அதிகரிக்க கூடும். இதை தவிர்க்க துணையுடன் நேரம் செலவிடுங்கள். உறவுகளுடன் மகிழ்ச்சியாக இருங்கள். அன்றாட பணிகளில் ஏதேனும் சிரமம் இருந்தாலும் மருத்துவரின் அறிவுரையை பின்பற்றுங்கள்.
எடை இழப்பில் பிரச்சனை
சுகப்பிரசவத்துக்கு பிறகு இரண்டு வாரங்களில் அன்றாட பணிகளை யாருடைய உதவியுமின்றி செய்யலாம். கர்ப்பகால உடல் எடையை குறைக்க மிதமான நடைபயிற்சி செய்யலாம். சிசேரியன் பிரசவத்துக்கு பிறகு உடல் விரைவில் திரும்பாது என்பதால் மிதமான நடைபயிற்சி கூட செய்வது சிரமமாக இருக்கும். இதனால் உடல் எடை இழப்பு சிக்கலாக இருக்கும்.
சமயங்களில் சிசேரியன் பிரசவத்துக்கு பிறகு கர்ப்பமாக இருப்பது போல் தோன்றலாம். இது சாதாரணமானது குழந்தையின் எடை, நஞ்சுக்கொடி மற்றும் அம்னோடிக் திரவம் என்று 6 கிலோவரை உடல் எடை இழப்பார்கள்.
மேலும் யோனி போக்கு வழியாகவும் எடை இழக்க வாய்ப்புண்டு. அதனால் சிசேரியனுக்கு பிறகு உடல் எடையை குறைக்க அவசரப்படாமல் முதலில் உடல் பழைய நிலைக்கு திரும்ப முயற்சி செய்யுங்கள். அதன் பிறகு படிப்படியாக உடற்பயிற்சி செய்ய தொடங்கலாம்.
மலசிக்கல் இல்லாமல் பார்த்துகொள்ளுங்கள்
பிரசவத்துக்கு பிறகு மலச்சிக்கல் வராமல் தடுக்க முயற்சி செய்யுங்கள். சிசேரியன் செய்த பிறகு இன்னும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் முக்கி மலம் கழிக்க கூடாது. மலச்சிக்கலை உண்டு செய்யும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்தினாலும் முக்கி மலம் கழிக்காமல் சின்ன ஸ்டூல் வைத்து மலம் கழித்தால் மலம் முழுமையாக வெளியேறும். இந்திய கழிப்பறை போன்று மலம் கழிப்பதும் எளிதாக இருக்கும்.
திட்டமிட்ட உணவுகள்
சிசேரியனுக்கு பிறகு (C-Section Recovery) மனதளவிலும் உடல் ஆரோக்கியத்திலும் மீண்டு வர உணவு முறை அவசியம். ஊட்டச்சத்து நிபுணரின் பரிந்துரையின் பெயரில் உணவுகளை திட்டமிட்டு எடுங்கள் போதுமான வைட்டமின்களை உணவுகளாக எடுங்கள்.
தினமும் காய்கறிகள், பழங்கள் எடுத்துகொள்ள வேண்டும். அதிக காரம், அதிக மசாலா, எண்ணெய் உணவுகள், பேக்கரி உணவுகள், துரித உணவுகள், குப்பை உணவுகளை தவிருங்கள்.
உடலை நீரேற்றமாக வைத்துகொள்ளுங்கள். தினமும் 3 லிட்டர் தண்ணீர் திரவ ஆகாரங்கள் சேர்த்துவருவது மலச்சிக்கலை தவிர்க்க உதவும். ஆரோக்கியமாகவும் வைக்க செய்யும்.
சுகாதாரமாக இருங்கள்
காயத்தின் மீது எக்காரணம் கொண்டும் அழுத்தி தேய்க்காதீர்கள். வைட்டமின் எண்ணெய்களை மென்மையாக தடவலாம். தும்மல் வராமல் பார்த்துகொள்ளுங்கள். அப்படியே வந்தாலும் வயிற்றை பிடித்துகொள்ளுங்கள்.
உடல்தூய்மை மிக மிக அவசியம். முதல் 4-6 வாரங்கள் சிசேரியனுக்கு பிறகு மருத்துவரின் அறிவுரையின் படி இரண்டு வேளை குளியுங்கள். வெதுவெதுப்பான நீராக இருக்கட்டும் அதிக சூடு வேண்டாம்.
மெல்லிய பருத்தி உடைகளை அணிவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். அதிக எடை தூக்க வேண்டாம். இந்த காலத்தில் முடி சருமம் இரண்டிலும் மாற்றம் உண்டாகு என்றாலும் ஹார்மோன் ஏற்றதாழ்வால் வரக்கூடியது என்பதால் படிப்படியாக சரியாக கூடும். சற்று பராமரிப்பு மட்டும் கவனம் செலுத்துங்கள்.
மருத்துவர் அறிவுறுத்தும் வரை தாம்பத்திய வாழ்க்கை தவிருங்கள். படிப்படியாக மூச்சு பயிற்சி மிதமான உடற்பயிற்சி செய்யுங்கள். யோகா செய்வது மனதையும் உடலையும் வேகமாக மீட்கும்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
சிசேரியனுக்கு பிறகு அறுவை சிகிச்சை காயம் சரியானாலும் வயிறு தொப்பை குறைய உடனடியாக பெல்லி பேண்டை அணியாமல் மருத்துவர் அனுமதியுடன் பயன்படுத்துங்கள். இயன்றவரை ஓய்வில் இருங்கள். இவை தவிர வேறு எந்த சிக்கல் இருந்தாலும் தாமதிக்காமல் உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.